Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாம் இந்துவோ முஸ்லீமோ அல்ல ! இந்தியர்கள் !!


    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர்  24தேதி தீர்ப்பு வரப்போகிறது தீர்ப்பு யார் பக்கம் சாதகமாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பு கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது

    காஷ்மீர் விவகாரத்தில் சொதசொதப்பாக நடந்து கொள்வது போல் இந்த விஷயத்திலும் மத்திய அரக நடந்துக் கொண்டால் இந்திய மக்கள் தேவையற்ற இன்னல்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்
   எனவே புத்திசாலித்தனமாக நிலைமையை முன்கூட்டியே உணர்ந்து தக்கப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அரசின் வேலை தும்பை விட்டுவாலைப்பிடித்தால் அதிகப்படியான இழப்பை நாடுஎதிர்கொள்ள நேரிடும் அதை நாடு தாங்காது

  கலவரத்தில் ஈடுபடுவது இந்துவாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும் அவர்களை பேதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் இதில் ஓட்டு அரசியல் யார் பார்த்தாலும் அவர்கள் நிச்சயம் பாரதத்திருநாட்டின் பகைவர்கள் என்றே கருதப்படுவார்கள்
    தனிமனிதர்களின் முக்கியத்துவத்தை விட மதங்களின் புனிதத்தன்மையை விட நாடு பெரியது இதுமட்டும்தான் போற்றுதலுக்குறியது என்பதை அனைவரும் மனதில் வைக்க வேண்டும்

  இந்த முக்கியமான நேரத்தில் இந்து மக்கள் ஒன்றை உணரவேண்டும் பாபரும் அவனைப்போன்ற அந்நியர்களும் இந்த நாட்டிற்குள் வந்தது ஆட்சியை நடத்தியது எல்லாமே நாம் விரும்பியது அல்ல என்றாலும் அது நடந்து முடிந்த விஷயம் அதற்காக இன்று வரலாற்று நிகழ்வுகளை மாற்றியமைக்க முயல்வது சரியான சிந்தனை அல்ல
    ராமர் பிறந்த இடத்தை பாபர் இடித்ததாகவே வைத்துக் கொள்வோம் அந்த முட்டாள் மன்னனின் செயலுக்காக காலம் கடந்தும் பரிகாரம் காண நினைப்பது எந்த வகையில் தர்மம்? 

    ராமர் கோயிலுக்கான போரட்டாம் பல தலைமுறையாக நடந்து வருகிறது சில சுயநல அரசியல்வாதிகளால்தான் பிரச்சனை பூதாகரமானது எனவே நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்று சிலர் சொல்லலாம்
     கற்பின் வடிவான சீதாதேவியை கடத்திக் கொண்டுப்  போன ராவணனே நிராயுதப்பாணியாய் நேரில் நின்றபோது இன்றுபோய் நாளை வாவென சொன்னவன் ஸ்ரீராமன் அவனது நிஜமான குழந்தைகள் நாம் என்றால் எதிரிகள் யாராக இருந்தாலும் எத்தகையவராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும் அன்போடு அரவணைக்க வேண்டும் அதுதான் ராமனுக்கு நாம் செலுத்தும் வந்தனம்
    இந்த அறிவுரை இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் ராஜபோகம் தன்னைசுற்றி இருந்தாலும் குடிசையில் வாழ்ந்தவர் முகமது நபி தனது கிழிந்த ஆடையை  தானே தைத்து உடுத்தி பொது வாழ்க்கைக்கு புது இலக்கணம் வகுத்தவர் அவர் தனது கொள்கையை ஏற்றுக்கொள்ளாத தந்தைவழி உறவினரையே மாற்ற நினைக்காமல் மாற்ற முனையாமல் மற்றவர்களின் கருத்து சுதந்திரத்திர்கு மதிப்புக் கொடுத்தவர் அண்ணல்நபி அவரின் வழியில் நடக்கும் எந்த உண்மையான முஷல்மானும் கலவரப்பாதையை தேர்ந்தெடுக்க மாட்டான்

    உலகில் எந்த நாட்டிலும் இந்துக்களைப்போன்ற பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினருக்கு சமஅந்தஸ்து வழங்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம் இந்தஉண்மையை உணர்ந்து ஏழ்மையில் கிடக்கும் லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களுக்கு கல்வியும் மருத்துவமும் கொடுக்க பாடுபடுங்கள்

     முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தினால்தான் வளர்வார்கள் என்பது வெறும்மாயை முஸ்லீம்களுக்கு வாழ்வாதாரம் வழங்கினால்தான் இஸ்லாம் வாழும் என்பதுதான் எதார்த்தம்

     எனவே ஆயுதங்களுக்கு செலவிடும் பணத்தை ஆக்க வழியில் பயன்படுத்த உங்கள் தலைவர்களுக்கு சொல்லுங்கள் சுண்ணாம்பாலும் செங்கல்களாலும் உருவான ஒருகட்டிடத்திற்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்டு சாவது மடத்தனம்

    காந்தி பிறந்த மண்ணில் அந்த அவலம் மீண்டும் மீண்டும் நடப்பது வேதனை மட்டுமல்ல அவமானமும் ஆகும் பாபரும் ஒளரங்கசீப்பும் தான் அந்நியர்களே  தவிர இங்கிருக்கும் முஸ்லீம்கள் யாரும் அந்நியர்கள் அல்ல நம் சொந்தங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் நமது ரத்தப்பந்தங்கள்

   ஒரு இந்துவை கொலை செய்துவிட்டால் ஜிகாத் நடத்தியதாக அல்லா மகிழ்வார் என்று எந்த முஸ்லீம் சொன்னாலும் அவன் நபிவழியை கேவலபடுத்தியவன் ஆவான்

    இஸ்லாமியனை கொன்றால் ராமன் மகிழ்வான் என எந்த இந்து நினைத்தாலும் அவன் ராமனை மட்டுமல்ல இந்து தர்மத்தையே குழிதோண்டி புதைத்தவன் ஆவான்

    தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நாம் வழக்கமாக அக்பர் வீட்டில் ரமலான் கஞ்சிக் குடிப்போம் அக்பருக்கு ராமநவமி பிரசாதம் கொடுப்போம்



Contact Form

Name

Email *

Message *