Store
  Store
  Store
  Store
  Store
  Store

செத்த பிறகும் வாழ முடியுமா?

 மரத்தன்மை என்ற வார்த்தை நிலையானது என்றும் எப்போதும் எந்தச் சூழலிலும் அழியாத தன்மை உடையது என்ற பொருளில் இந்த அழகிய வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால்  இந்த வார்த்தையை சிலர் அமரர் ஆகிவிட்டார் என்று மரணத்தோடு சம்பந்தப்படுத்தி பேசுகிறோம்.  நிலையானது என்ற பொருளுடைய இந்த வார்த்தையை நிலையற்ற மனித வாழ்வின் முடிவைக் குறிப்பதற்குப் பயன்படுத்துவது சரியானது தானா?

 இலக்கண நோக்கில் இந்த வார்த்தையை ஆராச்சி செய்வதை விட்டுவிட்டு தத்துவார்த்தப் பார்வையில் இதைப் பார்த்தோம் என்றால் இதன் உண்மைப் பொருள் புரியம்.
 மனித வாழ்க்கை என்பது என்ன?  உண்மையில் வாழ்க்கை என்று ஒன்று உண்டா?  உண்டு என்றால் பல்வேறுபட்ட கூறுகளைத தனக்குள் கொண்டதா அல்லது ஒருமுகப்பாடுடையதா என்று பார்க்கின்ற போது வாழ்க்கை என்பது சில சமயங்களில் பல்வேறு பட்ட அனுபவக் களஞ்சியமாகவும் வேறு சமயங்களில் ஒரே கூர்  உடைய கத்தி போன்றும் காணப்படுக்கிறது.  அதாவது வாழ்க்கை எந்தச் சமயத்திலும் நிலையானதாக இல்லாமல் மாறுபடும் தன்மையிலேயே அமைந்துள்ளதாகிறது.  அப்படியென்றால் வாழ்க்கையின் முடிவு மரணம் மட்டுமே நிலையானதாக அமைந்து இருக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

 மரணத்தை இந்திய தத்துவம் ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்குத் தாவுவதோடு ஒப்பிடுகிறது.  மேலை நாட்டுத் தத்துவமோ உடைந்த சட்டிக்கு ஒப்பிடுகிறது.  உண்மையில் மரணம் என்பது தாவுதலா முடிவான முடிவா என்பதை உணர்ந்து கொண்டோம் என்றால் அமரத்தன்மை என்ற வார்த்தையின் உண்மைப் பொருள் என்னவென்று தெரியும்.

 மரணத்தைப் புரிந்து கொள்வது இயல்பானதாக இருக்கலாம்  ஆனால் அதை உணர்ந்து கொள்வது சற்றுக்கடினமான விஷயம்.  அப்படி என்றால் ஒருவனுக்கோ அல்லது ஒரு ஜீவனுக்கோ  மரணம் ஏற்படுகிறது என்றால் நம்மைப் பொறுத்தவரை அந்த ஜீவன் நமது புலன்களிலிருந்தும் உலக இயக்கத்தில் இருந்தும் மறைந்து போய் விடுகிறது.  நேற்றுவரை உடலோடும் உணர்வோடும் நம் முன்னே நடமாடிய  ராமசாமி இன்று செத்தவுடன் வெறும் கருத்துப் பொருளாபிவிட்டார்  அவ்வளவுதான்.  ஆனால் ராமசாமிக்கு அவருக்கு அவரே முடிந்துவிட்டாரா அல்லது தனது வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயத்தை உணாந்து கொண்டிருக்கிறாரா என்பது நமக்குத் தெரியாது.  ஏனென்றால் செத்துப்போன அனுபவம் நம்மில் யாருக்குமே கிடையாது.
 செத்துப்போன அனுபவத்தை உயிரோரு இருந்தே நாம் பெற வேண்டும் என்றால்அதிகாரப்பூர்வமற்ற சில வழிமுறைகளை நாம் நம்பிக்கையோடு பின்பற்றியாக வேண்டும்.  இதை நம்பிக்கையோடு என்று ஏன் சொல்கிறேன்  என்றால் வாழ்க்கையின் பல அம்சங்களுக்கு அறிவு என்பது அவ்வளவாக உதவி செய்யாது.  அறிவின் பயன்பாட்டினால் அனைத்திலுமே வெற்றி பெற்றுவிடலாம் என்றால் இந்த உலகில் தரித்திரர்கள் என்ற இனமே இருந்திருக்காது. அனுபவமும் நமக்கு உதவி செய்து வருகிறது.  அதே நேரத்தில் சில விஷயங்களுக்கு அனுபவம் நம்பிக்கையோடு சற்று அறிவும் தேவைப்படுகிறது.

  மரணத்தை பற்றி அறிந்துகொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் அறிவு அனுபவம் நம்பிக்கை என்ற மூன்று முனைகளில் முயன்றோம் என்றால் நம்மால் மரணத்தை முழுமையாக இல்லாவிடடாலும் ஓரளவேனும் புரிந்து கொள்ளமுடியும்.

 நாம் ஆழ்ந்து உறங்கும்போது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் நமக்குள் என்ன நடக்கிறது என்பதும் நமக்குத் தெரிவதில்லை.  இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.  மயக்கம் தெளியும் வரை அவருக்கு அவரை சுற்றி நடந்தவைகள் எதுவும் தெரிவதில்லை.  இதே போன்றுதான் மரண அனுபவமும் இருக்குமோ என்ற ஐயப்பாடு நாம் கொள்ள பல சந்தர்ப்பங்கள் அமைகின்றன.

 மிக முக்கியமான விஷயத்தை இந்த இடத்தில் கருத்தில் கொள்ளவெண்டும்.  மரணம் என்பது உயிர்களுக்கு மட்டும்தான் நிகழ்கிறது. எனவே அது உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கிறது.  அதனால் உயிரைப் பற்றி அதன் நிலைப்பாடு மற்றும் வெளிப்படுதல் ஆகியவற்றை ஓரளவு தெரிந்துகொண்டு மரணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தோம் என்றால் தெளிவான இறுதி முடிவுக்கு நாம் வரலாம் எனக் கருதுகிறேன்.


 ஒரு ஜீவன் உயிரோடு இருக்கிறது என்பதை நாம் எதை வைத்து உடனடியாக அறிந்து கொள்கிறோம்.  உடல் இயங்குதல் சரீர உஷ்ணம் போன்ற சலனங்களின் அடிப்படையில் தான் உயின் இருப்பை உணர முடிகிறது.  அப்படியானால் இயக்க தத்துவத்தின் அடிப்படையில் தான் உயிருக்கு இலக்கணம் கூற முடியும்.  சாதாரணமாக உயிருள்ள மனிதன் முதலிய பிராணிகளை அதன் உருவம் அமைப்பு இவற்றிலிருந்து இனம் பிரித்துக் கண்டுகொள்ள முடிகிறது.  உயிர்போன சில மணி நேரங்கள் வரை அதன் உருவங்களில் எந்த மாறுபாடும் ஏற்படுவதில்லை.  அப்பொழுதும் அதாவது சாதாரணமாக நாம் சொல்லும் பிணத்தின் மீதும் உருவ மாறுபாடு இல்லை என்பதனால் அதில் உயிர்சக்தி இருப்பதாகக் கருதலாமா?

  பாலூட்டிகள் இனத்தைச் சார்ந்த மனிதன  மாடு முதலிய பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் உடல் உஷ்ணம் போய் குளிர்ந்துவிட்டது என்றால் அவைகள் செத்துப்போய் விட்டதாக நாம் கருதுகிறோம்.  குளிர்ச்சியால் மரணத்தை உறுதிப்படுத்தும் இந்த முறை நீர்வாழ் பிராணிகளுக்குப் பயன்தராது.  காரணம் அவைகளின் உடலில் நிரந்தரமாகவே குளிர்ச்சி தங்கியிருக்கும்.  அவைகளின் மரணத்தை நகராமை என்பதை வைத்தே முடிவு செய்யவேண்டும்  இந்த நகராமை சோதனையும் ஜலசந்துகளுக்கு ஒத்து வருமே தவிர மரம் செடி கொடிகளுக்கு ஒத்துவராது.  மரங்கள் உயிரோடு இருக்கின்றனவா?  பட்டுப்போய் விட்டனவா என்பதை அதன் வளர்ச்சித்தன்மையில் இருந்துதான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
 நகருதல் வளருதல் உஷ்ணம் என்பது எல்லாம் அணுக்களின் ஒழுங்கற்ற சலனமே ஆகும்.  மேற்குறிப்பிட்ட அனைத்தும் வெளி இயல்பைப் பற்றிய பௌதீகத் தேடலே ஆகும்.  புற இயல்பை விட்டுவிட்டு உள் கட்டமைப்பு பற்றிய சோதனைகளைத் தொடர்ந்தோம் என்றால் உயிரைப் பற்றி மிக அதிகமாகவே தெரிந்து கொள்ளலாம்.

 உயிரோடு இருக்கின்ற எல்லா ஜீவன்களுக்கும் பொதுவான அம்சம் ஒன்று உள்ளது.  அது அந்தந்த ஜீவனுக்குள் சதா சர்வகாலமும் நிகழும் ரசாயன மாற்றங்களே ஆகும்.  பல வகையான முற்றிலும் மாறுபட்ட ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத உயினங்களுக்குள் ரசாயன மாறுதல்களில் வியப்பைத் தரக்கூடிய பல ஒற்றுமைகள் உள்ளன.

 ஒரு குறிப்பிட்ட உயிருள்ள உடலுக்குள் சில சத்துப் பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து புதுப் பொருளாக உருவெடுப்பது தான் உயிரின் தோற்றம் அல்லது பரிணாமம் என்று விஞ்ஞானம் கூறுகிறது.

 இதை நமது வேதங்களில் உள்ள தத்துவப் பகுதிகளில் ஒன்றான சார்வாங்கமும் கூறுகிறது.  அதாவது வெற்றிலையில் இருப்பது பச்சை நிறம் சுண்ணாம்பில் இருப்பது வெள்ளை நிறம் பாக்கில் இருப்பது கபில நிறம்.  மூன்றில் எதிலும் சிவப்பு என்ற நிறம் இருப்பது இல்லை.  மூன்று பொருட்களும் ஒரு குறிப்பிட்ட அளவு சேரும் போது இல்லாத சிவப்பு எப்படி உருவாகிறதோ அதைப் போன்றதான் பூமி என்ற உயிர் கோளத்திற்குள் ஜீவன் என்பது உற்பத்தியாகிறது.
 அப்படி உற்பத்தியாகின்ற ஜீவ உடல்கள் அனைத்திற்குள்ளும் பொதுத்தன்மை உண்டு என்று வேதமும் கூறுகிறது விஞ்ஞானமும் கூறுகிறது. இதைச் சற்று ஆழந்து ஆராய வேண்டும்.  அப்படி ஆழந்து சென்றால் மட்டுமே நாம் எடுத்து கொண்டிருக்கும் அமரத்தன்மை என்ற விஷயத்தில் முழுமையான முடிவுக்கு வர இயலும்.

 உதாரணமாக மரத்தை எரிபொருளாக அதாவது விறகுகளாகப் பயன்படுத்துகிறோம்.  நமது மனித உடம்பின் உள்ளேயோ வெளியேயோ விறகு போன்ற பொருட்கள்  எதுவும் கிடையாது.  ஆனால் மரத்திற்குள் உள்ள கிளைக்கோஜன் என்ற தாதுப்பொருள் மனித உடம்பிலும் இருக்கிறது.  மரத்தில் உள்ள கிளைக்கோஜனுக்கும் மனித உடம்பில உள்ள கிளைக்கோஜனுக்கும் பெரிதான வேற்றுமைகள் எதுவும் இல்லை.  அதைவிட மரத்தின் வேர் தண்டு இலைகள் முதலிய உறுப்புகளில் நிகழும் ரசாயன மாறுதல்களுக்கும் மனித உடம்பிற்குள் நிகழும் ரசாயன மாறுதல்களுக்கும் அதிக ஒற்றுமைகள் இருக்கிறது.

 மனிதர்களான நம்மைப் போலவே மரத்தின் வேர்களுக்கும் பிராணவாயு தேவைப்படுகிறது.  ஒவ்வொரு நிமிடத்திலும் மரம் எவ்வளவு பிராணவாயுவை எடுத்துக்கொள்கிறது என்பது விஞ்ஞானக் கருவிகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  நாம் உண்ணுகின்ற உணவை பிராணவாயு எப்படி எரித்து சத்துப் பொருளாக மாற்றுகிறதோ அதே போன்ற நிகழ்வுகள் அனைத்து தாவர வகைகளிலும் நிகழ்கிறது.  சர்க்கரை தானாகத் தீப்பற்றி எரியாது. ஆனால் அதை பிராணவாயுவோடு சேர்த்து சூடாக்கினால் எரிய கூடிய பொருளாக அது மாறுகிறது.  அப்படி எரிய என்சைம் என்ற ஒருவித ரசம் தேவைப்படுகிறது.  நமது உடலுக்குத் தேவையான பிராணவாயு முழுவதும் இரும்பு சேர்ந்த ஒருவித என்சைமோடு சேரவேண்டும்.  அப்படி ஒரு கலவை நிகழும் போதுதான் உடல் இயக்கித்திற்கு அதாவது உயிரால் உடல் உந்தப்படுவதற்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கிறது.


  ஐந்தறிவு முதல் ஆறறிவு படைத்த ஜீவன்கள் உடலிலும் தாவரங்கள் மற்றும் ஜங்கமங்கள் அனைத்து உடலிலும் பல மாறுதல்கள் ஏற்படுவதற்கு உணவு பொருட்களை உடலுக்கு வேண்டிய பொருளாக மாற்றவும் சக்தியளிக்கம் இந்த என்சைம் என்ற ரசம் பயன்படுவதுதான் காரணமாகும்.  உருளைக்கிழங்கில் உள்ள சர்க்கரை மாவாக மாறுவதும் நமது உடலில் உள்ள சர்க்கரை கிளைக்கோஜனாக மாறுவதும் ஒரே மாதிரியானதுதான்.  இந்த மாறுதல்களால் முடிவாக உருவாகும் பொருட்கள்தான் வித்தியாசப்படுகிறது.  ஒரே மாதிரியான ரசாயன மாறுதல்கள்தான் பல வகையான உயிர்களின் அடையாளம் எனலாம்.

 மிருகங்கள் உணவு பொருட்களை உட்கொள்கின்றன.  தாவரங்கள் தங்களது உணவை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றன. இரண்டு செயல்களும் இரு துருவங்கள் போல் மாறுபாடு ஆனதாகத் தோன்றினாலும் இரண்டிற்குள்ளும் பொருட்கள் சிதைவதும் புதிதாக உண்டாவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. 
  அப்படி நடைபெற்றுவதற்குக் காரணமாக இருக்கும் ரசாயன மாற்றங்களின் மூலமான ரசாயனமே உயிர் என்று விஞ்ஞானம் கூறகிறது.  இந்த ரசாயனமே தனது வேலையை நிறுத்திவிட்டால் அல்லது அது தன் சத்தியை இழந்துவிட்டால் ஏற்படுவதுதான் மரணம் என்று அதன்பின் அந்த ரசாயனம் வேறு ஒரு பொருளைப் பற்றிக் கொண்டு செயல்படுவதில்லை.  அதாவது உயிர்ப்பிப்பது இல்லை.  ஒரு உடலுக்குள் இருக்கும் உயிர் அந்த உடல் அழிந்தவுடன் அந்த உடலுடனே அழிந்து போகிறது.  அவ்வளவுதான் அதற்கு மேலும் வேலையில்லை.  மறு பிறப்பு என்பதும் மறு உலக வாழ்க்கை என்பதும் வெறும் கற்பனைகளும் கட்டுக்கதைகளுமே ஆகும் என்று விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறுகிறது.

 விஞ்ஞானம் கூறுகின்றபடி உயிர் உடலோடு அழிந்து போகிறதா என்பதை ஆராய்ச்சி செய்வதற்கு முன்போ நம்புவதற்கு முன்போ விஞ்ஞானம் எந்த நிலையில் நின்று அதைப்பற்றிக் கூறுகிறத என்பதை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.  கண்ணுக்குத் தெரியும் விஷயங்கள் புலன்களால் உணர்ந்துகொள்ளும் விஷயங்களை மட்டுமே விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது.  புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையுமே விஞ்ஞானிகள் ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள்.  இந்த முறை சரியானது தானா?  இப்படி புலன் உணர்வுகளை மையமாக வைத்தே எல்லா விஷயங்களையும் அறுதியிட்டு இறுதி முடிவிற்கு வந்துவிட இயலுமா?

 உயிரைப்  பற்றி விஞ்ஞானம் கூறுவது சரியா?  தவறா?  என ஆராய்ச்சி செய்வதற்கு முன்பு விஞ்ஞானம் எடுத்துக் கொண்டிருக்கும் புலன் வழி நிரூபித்தல் என்பது சரியானது தானா என்ற முடிவிற்கு நாம் வரவெண்டும்.  காரணம் ஒரு முறை ஆராயப்பட்ட விஷயம் என்ன முடிவைத் தருகிறதோ அதே முடிவைத் தான் அது எத்தனை முறை எத்தனை நபர்கள் ஆராயும்போதும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மாறி மாறி முடிவுகள் வந்தால் அந்த முடிவுகள் நம்பத்தகுந்தவையாகாது.
  நம்பத்தகுந்த முடிவைப் பெற ஆராய்பவனின் ஆராய்ச்சிக் கருவிகளும் நிலையானதாக மாறுபாடு இல்லாததாக இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் தான் முழுமையான உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும்.  உயிர் விஷயத்திலும் மற்றும் பல நுண்ணிய விஷயங்களிலும் புலன்களை மட்டுமே துணையாகக் கொண்டு செயல்படும் போது அந்தப் புலன்கள் நம்பத்தகுந்ததா மாறுபாடு அற்றதா என்பதை ஐயம் திரிபர முடிவு செய்து கொள்ளவேண்டும்.

 இந்த மாதிரியான விஷயங்களையும் சரி வேறு எந்த மாதிரியான விஷயங்களாக இருந்தாலும் சரி ஆராய்ச்சி செய்பவன் என்று வரும்போதும் அவன் காலச்சூழலுக்கும் மற்றும் வேறு பலவிதமான சூழலுக்கும் கட்டுப்பட்ட மனிதனாகவே இருக்கிறான்  அப்படி எதற்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுபவனாக இருந்தாலும் அந்த முடிவுகள் அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளுக்கு மாறுபாடாக அமைந்தால் அரசு நிர்வாகம் அம்முடிவுகளின் தன்மையை மாற்றவோ மறைக்கவோ முடியும்.  இப்படி பல சம்பவங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி வரலாற்றில் நிகழந்து இருப்பதை யாரும் மறக்க இயலாது.

 உதாரணமாக பழைய சோவியத் யூனியனின் அரசியல் சித்தாந்ததிற்குச் சாதகமான முடிவுகளை அந்நாட்டு விஞ்ஞானிகள் வெளிக்கொண்டுவராத போது அவர்கள் முடிவுகள் மூடி மறைக்கப்பட்டதும் ஜெர்மானிய அறிவியலாளர்கள் நாஜிக்களின் சித்தாந்தத்திற்கு இசைவான கருத்துக்களை வெளியிட்டதையும் உலக அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள.
    ஆராய்ச்சியாளர்களின் கதியும் ஆராய்ச்சியின் நிலையும் இப்படியிருக்க ஆராய்ச்சிக்கு  ஆதாரமாகக்  கொள்ளும் புலன்களின் நிலை எப்படியிருக்கிறது என்பதைப் பற்றி சிறிது பார்ப்போம்.

நீதிமன்றத்தில் கூட கண்களால் பார்த்த சாட்சியை மிக முக்கியமானதாக எடுத்துக்கொண்டு பல தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.  சாதாரணமான விஷயமாக இருந்தால் கூட கண்களால் பார்த்துவிட்டேன் என்றால் அதற்கு மறுபேச்சு யாரும் பேசுவது கிடையாது.  அந்த அளவிற்கு நேரடி காட்சிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் அப்படிக் கொடுப்பது சரியா?  கண்கள் உண்மையான காட்சியைதான் காட்டுகிறதா என்ற சற்று ஆழமாகப் பார்த்தோம் என்றால் நேரடிக் காட்சியிலும் பல குற்றம் குறைகள் இருப்பது தெரியவரும்.


   இரயில் வண்டியில் நாம் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம்.  அப்போது ஜன்னல் வழியாகக் காட்சியில் கவனம் செலுத்தினோம் என்றால் ரயிலுக்கு வெளியே இருப்பது எல்லாம் பின்னோக்கி நகர்வதாக நமக்குத் தெரியும்.  இதைக் கூட நாம் முன்னோக்கிச் செல்வதனால் அப்படித் தெரிகிறது எனலாம்.  கண்ணாடியில் நாம் தலை வாரும் போதோ அல்லது உணவருந்தும் போதோ நம்மை பார்த்தோம் என்றால் வலது கையால் செய்வது இடது கையால் செய்வது போல் தெரியும்.  கண்கள் இப்படி காட்சிகளைப் புரட்டிக் காட்டுவதை பல உதாரணங்களின் மூலம் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  அடுத்ததாக சுவை உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம்.  இந்த உணர்வைத் தரும் நரம்புகள் நாக்கிலிருப்பதாக நம்பப்படுகிறது.  ஆனால்  கண்கள் கட்டப்பட்ட ஒருவனின் நாசியில் ஆப்பிள் துண்டையும் கொடுத்தோம் என்றால் கண்கட்டு அவிழ்க்கப்பட்டபின் தான் ஆப்பிள் சாப்பிட்டதாகக் கூறுவதைப் பார்க்கிறோம்.  இதே போன்றுதான் பரிச உணர்விலும் பல மாறுபாடுகளும் சிக்கல்களும் இருப்பதை அறிய முடிகிறது.  ஆக முக்கியமாகக் கருத்தப்படும் கண் நாசி மற்றும் உள்ள அனைத்தும் புலன் உறுப்புகளையும் தீவிரமாக ஆராச்சி செய்தால் அவைகள் பல நேரங்களில் நம்பிக்கைக்குரியதாக செயல்படவில்லை என்பதை அறிய முடிகிறது.

மேலும் கண்கள் பார்ப்பதும் காதுகள் கேட்பதும் அந்தந்தப் புலன்களின் தனிப்பட்ட சக்தியில் இல்லையென்றும் அவைகளின் மூல சக்தி மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் உடற்கூறு சாஸ்திரம் விரிவாக்க கூறகிறது.  அப்படியென்றால் புலன்களின் நம்பகத்தன்மை என்பது மூளையின் செயல்பாட்டை பொறுத்தே அமைகிறது என்பது தெளிவாகும்.  மூளையின் செயல்பாடு நியூட்ரான் அசைவுகளின் அடிப்படையில் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதாக மூளையை ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
  எனவே புலன்களும் நம்பத் தகுந்தவையல்ல மூளையும்  நம்பகமானது அல்ல என்ற முடிவிற்கு நாம் வர வழிவகுக்கிறது. இதை ஆதாரமாகக் கொண்டு பார்த்தோம் என்றால் கட்புலனாகும் விஷயங்கள்தான் உண்மை என்பதும் புலன்களுக்கு அப்பாற்பட்டு எவையும் இல்லை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகிறது.  அப்படியென்றால் நம்பிக்கையும் அனுபவமும் கூறும் உடல்தான் சாகிறது உயிர் சாவதில்லை.  ஒரு கூட்டுக்குள்ளிருந்து வேறு ஒரு கூட்டுக்குள் பயணம் செய்வதுதான் மரணம் என்பதை நம்புவதும் உறுதியுடன் பிரச்சாரப்படுத்துவதும் எந்த விதத்திலும் தவறில்லை.  அதற்காகக் கூச்சப்பட வேண்டியதில்லை.

 உயிர் என்பது நிலையானது அழிவற்றது என்பதனால் தான் நமது முன்னோர்கள் இறப்பை அமரத்துவம் என்று குறிப்பிடுகிறார்கள்.  அமர நிலைக்குச் சென்று விட்ட ஆத்மாக்களின் பூர்வ பதிவுகளைத் தாங்கி நிற்கும் சூடசம  அயனவெளி ஷேத்திரத்திற்கு அமரலோகம் என்று பெயரிட்டும் அழைத்தார்கள்.  அப்படி அமரலோக வாசிகளாகிவிட்ட ஆத்மாக்களோடு சரீர வாசிகளான ஆத்மாக்கள் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்த்தே மரித்தவர்களை அமரர் என்று அழைக்கிறார்கள்.





  • ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்



  • Contact Form

    Name

    Email *

    Message *