Store
  Store
  Store
  Store
  Store
  Store

16 வயதின் பரிதவிப்பு

  ஆகாஷை முதன் முறையாக நான் பார்த்த போது பத்தாம் வகுப்பு தேர்வில் எல்லா பாடங்களிலும் வெற்றிகரமாக தோற்று அப்பாவிடம் திட்டு வாங்கி கொண்டிருந்த நேரம்.  பொண்ணாடி வளர்த்து வச்சியிருக்க  மூணு வேளை வக்கனையா சோறை ஊட்டு, கேட்டதெல்லாம் வாங்கிகொடு அவ படிச்சாளா?  இல்லையா? என்று பார்க்காத தகப்பன்காரன்கிட்ட புள்ளையோட பிராகரஸ் ரிப்போர்ட்ட காண்பிச்சா வண்டவாளம் தண்டவாளத்துல ஏறும்ன்னு என்ன மாதிரியே கையெழுத்து போட கத்து கொடுத்தவ தானே நீ.  என்று அம்மாவை ஏகத்திற்கு அப்பா திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.

  பதினைஞ்சு வயசுக்கான புத்தி இருக்கா உனக்கு?  இன்னிக்கு வரையும் தெரு பசங்களோடு சேர்ந்து கோலி அடிக்கிற, பச்ச குதிர தாண்டற, உருப்படியா ஒரு நாளாவது படிச்சியிருக்கியா?  முண்டம்  முண்டம்.  தெண்டத்துக்கு வளர்ந்து நிக்கற, என்று என்னையும் பார்த்து திட்டி தீர்த்தார்.  அப்பா எப்போதுமே அப்படி தான்.  கோபம் வந்தால் மடைதிறந்த வெள்ளம் போல வசவுகளை கொட்டி தீர்த்து விடுவார்.  அவர் திட்டுவது எனக்கு சங்கடமாக இருப்பது போல முகத்தை உம்மென்று வைத்து கொள்வேன் மூஞ்சிய பாரு அமுக்கி வச்ச பணியாரம் மாதிரி என்று அவர் சொல்லவும் நான் அழ ஆரம்பித்து விடுவேன்.  நிஜமாகவே அழுகை வராது.  அவர் திட்டுவதை நிறுத்த வேண்டுமென்பதற்காக வலிய கண்ணீரை கஷ்டப்பட்டு வரவழைப்பேன்.



   உடனே அப்பா மனசு மாறிவிடும்.  எக்கேடாவது கெட்டு போ என்று வெளியில் கிளம்பி விடுவார்.  திரும்பி இரவில் வீட்டிற்கு வரும் போது எங்கேடி நம்ம மொசகுட்டி என்று கேட்டு கொண்டே வருவார்.  அம்மா பிசைந்து ஊட்டிய சாதத்தை வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு பாதி தூக்கத்திலிருக்கும் என்னை எழுப்பி கடையில் வாங்கி வந்த இனிப்பு பொருளை வாய்க்குள் திணித்து ஊட்டி விட்டு முதுகில் தட்டி உறங்க வைப்பார்.

  அன்றும் அப்படி தான் நடந்திருக்கும்.  ஆனால் அதற்குள் வாசலில் மணி அடித்தது.  பரிட்சை, தோல்வி, அப்பாவின் திட்டுக்கள் எல்லாவற்றையுமே மறந்து கதவை திறக்க ஓடினேன் என்ன புள்ளையோ!  கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கா பாரு, சதா விளையாட்டு புத்தி தான்.  என்று அப்பா சலித்து கொள்வது காதில் கேட்டாலும் அதை நான் பொருட்படுத்தவில்லை.

  ஓடிப்போய் கதவை திறந்தேன்.  வாசலில் ஆகாஷ் நின்று கொண்டிருந்தான்.  இதற்கு முன் நான் அவனை பார்த்ததுயில்லை.  அவன் யாரென்றே எனக்கு தெரியாது.  மிக தொலைவில் இருந்து அவன் பயணப்பட்டு வந்திருக்க வேண்டும்.  சுட்ட கத்திரிக்காய் மாதிரி முகம் சூம்பி கிடந்தது.  தலையெல்லாம் கலைந்து நெற்றியில் வியர்வை பிசுபிசுப்பு தெரிந்தது.  யார் நீங்க?  என்ன வேண்டும் என்று அவனிடம் கேட்டேன்.  அவன் மேலும் கீழும் என்னை பார்த்தான்.  எதோ விசித்திரமான  பொருளாக என்னை நோக்குவது தெரிந்தது.  நான் செவிடல்ல.  நீங்கள் மெதுவாகவே கேட்கலாம் என்று அவன் சொன்ன போது தான் நான் சத்தமாக பேசியிருப்பது எனக்கு புரிந்தது.  முதல் முறையாக ஒரு ஆண் பிள்ளையின் முன்னால் வெட்கப்பட்டேன்.  நாங்கள் எதிர்த்த வீட்டிற்கு குடி வந்திருக்கிறோம்.  அந்த வீட்டு சாவி உங்கள் வீட்டில் இருப்பதாக சொன்னார்கள் அதான் வாங்க வந்தேன்.  என்று அவன் மிக மெதுவாக பேசினான்.  அவன் பேச்சியிலிருந்த தெளிவும், நிதானமும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.


  அதற்குள் யார் வந்திருக்காங்க என்று கேட்டவாறு அப்பா வாசலுக்கு வந்து விட்டார்.  அவன் என்னிடம் சொன்னதையே அப்பாவிடம் சொன்னான்.  அப்பா என்னிடம் கீர்த்திகா பீரோவுக்கு பக்கத்தில் ஆணியில் மாட்டியிருக்கும் சாவியை எடுத்து வா என்று உள்ளே அனுப்பினார்.  எந்த ஊரிலிருந்து தம்பி இங்க குடி வருகிறீர்கள்.  கூட அப்பா அம்மா யாராவது வந்திருக்காங்களா? என்று அப்பா கேட்டதும், நாங்க தஞ்சாவூர்.  அப்பாவுக்கு இந்த ஊரில் ஸ்டேஷன் மாஸ்டரா மாற்றலாகி வந்திருக்கோம்.  என் பெயர் ஆகாஷ் என்று அவன் பதில் சொல்வதும் என் காதில் விழுந்தது.  சாவிய எடுத்து கொண்டு அப்பாவிடம் கொடுத்தேன் அதை அவரிடம் வாங்கி கொண்ட அவன் நன்றி.  நான் வருகிறேன் என அப்பாவிற்கு வணக்கம் வைத்து புறப்பட்டான்.

  அவன் பேசிய விதமும், அவனது பெயரும் எனக்கு ஏனோ மிகவும் பிடித்து போய்விட்டது.  நாலைந்து முறை எனக்குள்ளேயே ஆகாஷ், ஆகாஷ் என்று சொல்லி பார்த்தேன்.  இரவில் சாப்பிடும் போது அம்மாவிடம் ஆகாசம் என்றால் வானம் தானே அம்மா என்று கேட்டேன்.  ஆமாம் என்னிடம் ஆயிரம் கேள்வி கேளு.  வாத்தியாருங்ககிட்ட உருப்படியா எதாவது கேள்வி கேட்டு இருந்தா மொத்தமா நூறு மார்க்காவது வாங்கியிருக்கலாம்.  என்று என்னை கடுப்பாக்கினார்.

  பலரின் வாழ்க்கை ஏதோ ஒரு சிறிய சம்பவத்தால் தான் திசை மாறுகிறது.  அப்படி மாறும் போது அதன் விளைவுகள் என்னவாக  இருக்கும் என நிறைய பேர்களால் யூகித்து அறிய முடியவில்லை.  எனக்கு ஏற்பட்ட இந்த விளையாட்டு தனமான எண்ணம் எதில் போய் முடியும் என்று முன்னமே நான் யோசித்திருந்தால் பலரை நான் சங்கடப்படுத்தி, என்னையும் துன்பத்தில் ஆழ்த்தாமல் தப்பித்து இருக்கலாம்.  ஆனால் விதியென்ற நதி வேகமாக வந்த போதும் போது அறிவு விளக்குகள் தானாக குளிர்ந்து விடுகின்றன.



  ஆகாஷின் அப்பா எங்கள் ஊருக்கு புதிதாக மாற்றலாகி வந்திருந்த ரயில்வே மாஸ்டர்.  அவருக்கு ஆகாஷ்சும், அவனை போலவே ஒரு அழகான தங்கையும் பிள்ளைகளாக இருந்தது எனக்கு சௌகரியமாகி விட்டது.  அவன் தங்கைக்கு என் வயது தான் இருக்கும்.  அவள் ஊருக்கு புதிது என்பதினால் முதன் முதலில் தன்னை பார்த்து சிரித்த என்னோடு வெகு சுலபமாக நட்பாகி விட்டாள்.

    பத்தாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தோற்று போனதினால் மீண்டும் எழுத டுட்டோரியலில் என்னை அப்பா சேர்த்து விட்டிருந்தார்.  புவனா அது தான் ஆகாஷின் தங்கை ப்ளஸ் ஒன்னில் படிப்பதினால் அடிக்கடி சந்தேகம் கேட்க அவள் வீட்டுக்கு செல்வேன்.  நான் வருவதையோ, போவதையோ ஆகாஷ் கண்டு கொள்வதே இல்லை.  இந்த வருடம் தான் கல்லூயில் சேர போகிறானாம்.  நான் பள்ளிகூடம் போனால் கூட கையில் புத்தகத்தை எடுத்து படிக்க மாட்டேன்.  ஆனால் அவன் கல்லூயில் சேரும் முன்னே புத்தகமும் கையுமாகத் தான் இருந்தான்.  அவனிடம் இருக்கும் புத்தகத்தில் அட்டையின் அழகும் தலைப்பும் நிச்சயம் அது பாடபுத்தகமல்ல என்பதை எனக்கு சொல்லியது.  உங்கள் அண்ணன் எப்போதும் படித்து கொண்டு தான் இருப்பாரோ?  என்று புவனாவிடம் கேட்டும் விட்டேன்.  என் அண்ணா சின்ன வயசிலிருந்தே எதையாவது படித்து கொண்டிருப்பார் என்று அவள் பதில் சொன்னாள்.

  நாள் செல்ல செல்ல எனக்கு பாடம் தலைக்கேறியதோ இல்லையோ ஆகாஷை பற்றிய சிந்தனை என்னை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டது.  ஏதாவது ஒரு சாக்கிட்டு அவனை பார்க்கும் சந்தர்ப்பத்தை நானே உருவாக்கி கொள்வேன்.  ஒரு நாளைக்கு இரு முறையேனும் பார்க்கவில்லையென்றால் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடும்.  இத்தனைக்கும் அவன் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.  எதாவது பேச மாட்டானா என வலிய அவன் முன்னால் போய் நிற்பேன்.  அழகாக சிரித்து விட்டு நகர்ந்து விடுவான்.



  மனமெல்லாம் ஆகாஷ் நிறைந்த பிறகு பாடம் எப்படி மனதில் நிற்கும்.  மீண்டும் மீண்டும் பரிட்சையில் தோற்றேன்.  என் மாற்றம் சிந்தையின் தடுமாற்றம் அப்பாவின் கண்ணிலிருந்து தப்பலில்லை.  ஒரு நாள் என்னை கூப்பிட்டு கீர்த்தி கண்ணா உனக்கு என்ன ஆச்சு முன்பெல்லாம் பசங்க கூட விளையாடபோய் தான் படிப்பை கெடுத்துக்குவ.  இப்ப விளையாட போறதும் இல்லை.  உண்மையில் உனக்கு படிப்பு ஏறவில்லையா?  அல்லது படிக்க பிடிக்கவில்லையா.  பிடிக்கவில்லையென்றால் சொல் உன்னை கஷ்டப்படுத்தவில்லை என்று கேட்டார்.  போப்பா எனக்கு புரியற மாதிரி யாருமே சொல்லி கொடுக்கல.  புவனா அண்ணன் தான் அவளுக்கு டியுஷன் எடுக்கிறாரு எனக்கும் எடுக்க சொல்லு.  நான் ஒழுங்கா படிப்பேன் என்று விளையாட்டாகாத்தான் சொன்னேன்.  மறுநாளே அப்பா அதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.  எனக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.

 எப்போதும் சாயங்காலம் ஐந்து மணி ஆகுமென்று காத்திருப்பேன்.  புத்தகங்களை பொறுக்கி கொண்டு ஆகாஷ் வீட்டிற்கு ஓடிவிடுவேன்.  அவன் எனக்கு பாடம் சொல்லி தருவதையே இமை கொட்டாமல் பார்த்திருப்பேன்.  அவன் மீது கொண்ட ஆர்வம் படிப்பின் மீது தொத்தி கொண்டது. வீட்டில் வந்தும் படிக்க ஆரம்பித்தேன்.  அதிசயத்திலும் அதிசயம் அப்பாவால் அதை நம்பவே முடியவில்லை அம்மாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  எல்லா பாடத்திலும் ஒரே மூச்சில் தேறிவிட்டேன்.

 ப்ளஸ் ஒன்னில் என்னை சேர்க்கும் போது ஆகாஷிடம் சொல்லி கொள்ள அவன் வீட்டுக்கு போனேன்.  வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான்.  இதுவரை எத்தனையோ முறை அவனோடு தனித்து பேச முடியாதா என ஏங்கியிருப்பேன்.  அவனும் நானும் தனித்திருப்பதாக கற்பனை செய்து சினிமா படம் போல் மனம் நிறைய ஓட்டி பார்த்திருப்பேன்.  அந்த சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருப்பதாக எண்ணி சந்தோஷப்பட்டேன்.  இத்தனை காலம் மனதிற்குள்ளேயே வைத்து பொத்தி பாதுகாத்த காதல் எண்ணத்தை எப்படியாவது வெளிபடுத்தி விடவேண்டும் என்ற ஆவலில் என்ன பேசுகிறேன் என்பதை கூட உணராமல் ஆகாஷ் நாம இரண்டு பேரும் கல்யாணம் கட்டிக்கிலாமா?  என்று கேட்டு விட்டேன்.


  பெரிய அதிர்ச்சியை பார்த்தவன் போல் அவன் திகைத்து விட்டான்.  தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து மிக நிதானமாக எழும்பி எனது அருகில் வந்தான்.  அப்போது அவனது பார்வை மோட்டார் சைக்கிளில் அடிபட்டு கால் ஒடிந்து போன நாய்குட்டியை அம்மா பரிதாபமாக பார்த்தது போல் என்னை பார்த்தான்.  பக்கத்தில் வந்து அடி அசடு தப்பா பிதற்றாதே நான் உன்னை என் பாப்பா மாதிரி தான் நினைக்கிறேன்.  மனதை வித்தியாசமாக போட்டு குழப்பிக்காதே.  படிக்கும் வேலையை பார் என்றான் எனக்கு என்னவோ போலாகிவிட்டது.  அழுது கொண்டே வீட்டுக்கு போனேன்.  கட்டிலில் வீழ்ந்து விம்மி விம்மி அழுதேன்.

  இவனை நினைத்து எப்படியெல்லாம் கற்பனை செய்திருந்தேன்.  அவன் எண்ணம் என் மனதில் இல்லாத நேரம் என்பதே இருந்ததில்லை.  ஒரு அழகான பூவை பார்த்தாலும் கருமையான மீசைக்கு கீழ் சிவப்பாக தெரியும் அவன் உதடுகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வரும்.  ஆட்டு குட்டியின் வெல்வெட் போன்ற முதுகில் என் கன்னங்களால் வருடி அவன் தாடியில் முகம் புதைப்பது போல் கானகண்டு இருப்பேன்.  இத்தனை கனவுகளை சுமந்தவளின் வார்த்தைகளை ஒரு பொருட்டென மதிக்காமல் ஒரே நிமிடத்தில் ஊதாசினப்படுத்தி விட்டானே. 

  அவன் நினைப்பு இல்லாமல் எப்படி நான் வாழ முடியும்.  இனி அவன் கிடைக்கமாட்டான் என்பது தெரிந்த பிறகு உரிமையோடு எப்படி அவனை நினைக்க முடியும்.  இந்த எண்ணங்கள் மீண்டும் மீண்டும் எழ அழுகை ஆறு அனையை உடைத்து கொண்டு பாய்ந்தோடியது.  அம்மா நான் அழுவதை கண்டுபிடித்து விட்டார்கள்.  ஏண்டா ராஜா அழுவுற உனக்கு என்ன கஷ்டம் அம்மாகிட்ட சொல்லு என்று கெஞ்சி கேட்டார்கள்.  சொல்ல கூடிய விஷயமா இது.  பெண் பிள்ளைகள் தாயிடம் தான் எதையும் மறைக்காமல் பேசும் என்பார்கள்.  எந்த பிள்ளை அப்படி பேசுகிறதோ தெரியவில்லை.  ஆனாலும் எல்லோரும் இப்படிதான் காலங்காலமாக சொல்லி வருகிறார்கள்.


  அம்மாவை சமாதானபடுத்துவதற்கு வயிற்றுவலி தாங்க முடியலம்மா என்றேன்.  அவர்கள் பதறி போய்விட்டார்கள்.  வழக்கமாக வரும் மாதாந்திர வலி என்று அவர்கள் முடிவு செய்திருக்க வேண்டும்.  வேகமாக கிளம்பி மருந்து வாங்க போய்விட்டார்கள்.  வீட்டில் யாரும் இல்லாத சுதந்திரமான நிலையில் இன்னும் அதிகமாக அழுகை வந்தது.  அழுகை அதிகரிக்க அதிகரிக்க இனி வாழ்ந்து பிரயோஜனமில்லை செத்து போவது தான் சரியான வழி.  ஆகாஷ் இல்லாத வாழ்க்கை சுடுகாட்டிற்கு  சமமானது நான் செத்த பிறகாவது என் காதலை அவன் புரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றவே வேகமாக சமையல் கட்டுக்கு சென்றேன்.

 இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ரேஷன் கடையிலிருந்து அப்பா மண்ணெண்ணை வாங்கி வைத்திருந்தார்.  எனக்காகவே கஷ்டப்பட்டு வரிசையில் நின்று வாங்கி வைத்திருக்கிறார் போல்.  எவ்வளவு நல்ல அப்பா  நான் எது கேட்டாலும் வாங்கி தருவார்.  நான் கேட்காததையும் என் தேவையறிந்து வாங்கி விடுவார்.  இப்படி தான் மண்ணெண்ணையும் வாங்கியிருப்பாரோ.

  மண்ணெண்ணை கேனை திறந்து தலை வழியாக ஊற்றினேன்.  அவசரத்தில் நெருப்புபெட்டி உடன் அகப்படவில்லை.  பரபரப்பாய் தேடி கண்டுபிடித்து குச்சியை உரசி துப்பட்டாவில் நெருப்பு வைத்தேன்.  நெருப்பு குபிர் என பற்றிக் கொண்டது.  தோலை உரித்து மிளகாய் பொடியை தூவியது போல் எரிச்சல் உடலெங்கும் பரவியது.  மூச்சு விட முடியவில்லை.  காற்றை வாய்வழியாக இழுத்தால் நெருப்பு வாய்க்குள்ளும் சென்றது.  அதுவரை இருந்த மரண பிடிவாதம் சட்டென செத்து விழுந்தது.  எப்படியாவது வாழவேண்டும் என்ற ஆசை நெருப்பு சூட்டிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற வெறி அரக்கதனமாக சூழ்ந்தது.  எரிச்சல் தாங்க முடியாமல் கத்தினேன்.  இது தான் மரண ஓலமோ, தண்ணீர் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.  தண்ணீர் குடத்தை தேடி நகர்ந்தேன்.  நெருப்பு இன்னும் பரவியது.  தரையில் வீழ்ந்து விட்டேன்.  தாங்க முடியாத வலியும், பயமும் என்னை சூழ்ந்து விட்டது.  அந்தகார இருட்டிற்குள் செல்வது போல் உணர்ந்தேன்.  என் உணர்வுகள் தப்பியது.  இதுதான் மரணமயக்கம்.  வெளிச்சமாக இருந்த அறை திடிரென இருட்டானது போல் எனக்குள் எல்லாம் ஸ்தம்பித்து விட்டது.

  மீண்டும் நான் கண்விழித்த போது மருத்துவமணையில் இருப்பதை உணர்ந்தேன்.  என்னை சுற்றி நர்சுகளின் முகமும் இடையில் அழுது வீங்கி போன கண்களோடு அம்மா அப்பா முகமும் தெரிந்தது.  சிறிது நேரத்தில் வலியின் முழுமையை உணர்ந்தேன்.  கழுத்தை திருப்ப முடியவில்லை.  அசைக்க நினைத்தாலே வலித்தது.  அதை விட அதிகமாக அவமானம் வலித்தது.  இதற்கு என்ன காரணம் சொல்வேன்.  ஆனாலும் அம்மா அய்யோ மகளே தாங்கமுடியாத வலிக்கு நெருப்பா வைத்து கொள்வார்கள்.  என்று அப்பாவியாக சொல்லி அழுதார்.

  நான் தள்ளாடி கீழே வீழ்ந்த உடனேயே அம்மா வந்திருக்கிறார்.  தண்ணீர் ஊற்றி சாக்கு போட்டு சுத்தி எப்படியோ காப்பாற்றியிருக்கிறார்.  நெருப்பு அதிகமாக பிடிக்கவில்லை போலும்.  மார்புக்கு மேல் தான் நிறைய காயம்.  முகமெல்லாம் கொப்பளமாகி வெடித்து உப்பு காகிதத்தை போட்டு தேய்த்தது போல் எறிச்சலாக இருந்தது.  நீளமான தலைமுடி எல்லாமே எறிந்து சாம்பலாகிவிட்டது.  தீக்காயம் பட்ட முகமும் கருத்து போன மொட்டை தலையும் ஒரு நிமிடம் மன கண் முன் தோன்றி பயமுறுத்தியது.

பத்து நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்து விட்டேன்.  இந்த பத்து நாளில் வீட்டுக்கு சென்று சாப்பாடு எடுத்து வருவது அவசர வேலைகளுக்கு ஓடுவது எல்லாமே ஆகாஷ் தான்.  அவனை இப்போது பார்க்க எனக்கு பாவமாக இருந்தது.  என் மீதுதான் அவனுக்கு எவ்வளவு அக்கறை, உண்மையான அன்பு காதல் மட்டுமல்ல என்பதை அவனின் ஒவ்வொரு செயலும் எனக்கு தெளிவாக்கியது.  நான் இப்படி செய்து கொண்டது எனக்கு நானே கொடுத்த தண்டனை.  இதற்கு அவன் எப்படி பொறுப்பாக முடியும்.

உடம்பில் ஏற்பட்ட காயங்கள் எல்லாம் பூரணமாக ஆற ஆறுமாதமாகி விட்டது.  ஆனால் எந்த தழும்பும் மறையவில்லை.  கழுத்தும், தோள்பட்டையும் இறுகலான தசையால் திருப்புவதற்கு கஷ்டமாக இருந்தது.  கண்ணாடியில் பார்க்கும் போது மகா குரூரமாக என்முகம் தெரிந்தது.  அம்மாவின் சிரித்த முகமும் அப்பாவின் குறும்பு பேச்சியும் நிரந்தரமாக காணாமல் போய்விட்டது.  ஆனால் என் மனதிற்குள் வயதுக்கு மீறிய தைரியமும் தெளிவும் வந்தது போலிருந்தது.  நான் மட்டும் பழைய படி சிரித்து பேசினேன்.  எல்லோரின் சந்தோஷத்தையும் கெடுத்து விட்டேனே என்று அவ்வப்போது தனிமையில் அழுதேன்.

இந்த நிலையில் ஒரு நாள் ஆகாஷ் என் வீட்டிற்கு வந்தான்.  அம்மா அடுப்பங்கரையில் ஏதோ வேலையில் இருந்தார்.  என் அருகில் வந்த அவன் என் மனசு சரியில்லை கீர்த்திகா.  என்னால் தான் உனக்கு இந்த கதி என்று நமக்கு தெரியும்.  நான் ஒரு முடிவு செய்து இருக்கிறேன்.  வேலை கிடைத்தவுடன் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்றான்.

என் மனதிற்குள் அவனை பற்றிய பெருமை அதிகரித்தது.  சாதாரணமாக இருக்கும் போது என் மீது வராத காதல் நான் குரூரமான பிறகு வந்திருக்கிறது என்றால் அதன் பெயர் தான் சத்தியமான காதல்.  ஆனாலும் அவன் காதலுக்கு மரியாதை செலுத்த முடியாத நிலையில் நான் இருந்தேன்.  ஆண்மையின் கம்பீரம் அனைத்தும்  பொருந்திய அவன் ஜோடியாக நான் இருந்தால் வாழ்க்கை முழுவதும் நன்றிக்கு கட்டுப்பட்ட அடிமையாக இருக்க வேண்டும்.  அதன் பேர் வாழ்க்கையல்ல.  யாசகம் பிச்சை.  அதற்கு நான் தயாரில்லை.  எனவே அவனை பழிவாங்க விரும்பினேன்.  அட அசடே தப்பாய் எதையும் பிதற்றாதே.  நான் உன்னை அண்ணாவாகத் தான் நினைக்கிறேன் என்றேன்.  அதை கேட்டவுடன் அவன் முகம்?






Contact Form

Name

Email *

Message *