Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரு விதவையின் கேள்வி

    நான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிராமணப் பெண் எனக்குத்தற்போது 86 வயதாகிறகிறது இத்தனை வயதில் நான் பட்டக் கஷ்டங்களுக்கு அளவே இல்லை அவைகளை யெல்லாம் எழுதினால் நிறையப் பக்கங்களில் மற்றவர்களை அழவைக்க வேண்டிவரும் என்பதினால் சொல்லாமல் ஒன்றைமட்டும் உங்களூடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்

  எனக்கு 15 வயதில் திருமணம் நடந்தது அப்போது இது தாமதமாக நடந்த கல்யாணம் பதினாறு வயதில் பையனையும் பதினேழு வயதில் பெண்ணையும் பெற்றேன் என் அம்மா மாதிரி சுமார் அரைடசன் குழந்தையாவது பிறக்கும் என்ற கனவில் இருந்தபோது மூனே நாள் குளிர்காய்ச்சலில் ஆம்படையான் போய் சேர்ந்துட்டார் எனக்கு உலகமே இருண்டு போனாப் போல் ஆயிட்டது


  என்புத்தாத்து மனுஷா ரொம்ப நல்லவா நீ கைபிடிச்சி வந்த நேரம்தான் கிழங்கு கணக்கா இருந்த புள்ளையாண்டான் போயிட்டான் இன்னும் ஏன்டி துக்கிரித்தனமா ஆத்துல நடமாடுறே எங்கையாச்சும் இந்தக் குழந்தை கருமங்களை தூக்கிட்டுப் போக வேண்டியது தானேன்னு பேசினா

   நான் என்னப் பண்ணுவேன் அழுகையும் கண்ணுமா எங்காத்துக்கு வந்தேன் என் அப்பாவும் நான் பிறந்த வுடனே போயிட்டாராம்  அண்ணாத்தான் எனக்கு எல்லாம் உடன் பிறந்தாள தெருவிலவிட மனம் வருமோ ஆனா மன்னி நாக்குல கருந்தேள்தான் குடியிருக்கும் எப்பவாச்சும் நடக்கும் தவறுக்கு நாள் கணக்கில் பேசுவாள்

  என்ன செய்யிறது நான் ஒத்த மனுஷீன்னா ஒருமொளக்கயிறு போரும் இரண்டு பிஞ்சுகள் கையில் இருக்கே எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன் ஆனா பதினேழு வயசில தலையை மொட்டை அடிச்சி ருத்ராட்சம் மாட்டி பாக்கிறதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியலே


   ஏன் குருஜி ஐயா சின்ன வயசில் புருஷன் செத்துப்போனா பொம்மனாட்டி என்ன செய்வாள்? இதில் பெண்களின் குற்றம் ஏங்கே இருக்கிறது ?நாங்களாகவே விரும்பியா இந்தக் கோலம் போட்டுக்கிறோம்? இல்லையே! சாஸ்திரம் தர்மன்னு சொல்லி மற்ற மனுஷா தருகின்ற கோலத்திற்கு எங்களை ஏன் பழிவாங்குகிறார்கள்?

  கல்யாண வீட்டுக்கு வராதே மங்களப் பொருட்களை தொடாதே தெருவில் கூட இறங்காதே என்று கொடுமைப் படுத்துவது ஏன் கைம்பெண்களை ஒதுக்கி வையின்னு சாஸ்திரம் சொல்கிறதா? மதம் சொல்கிறதா? அப்படியென்றா கைம்பெண்கள் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள் இல்லையா?

  வெகு நாட்களாக உங்களைப் போன்ற விபரம் அறிந்த மற்றவர்களின் எண்ங்களை புரிந்துக் கொள்ளக்கூடிய சந்நியாசிகளிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண்டுமென்றிருந்தேன் என் பேரன் தான் உங்கள்ளைப்பற்றி சொல்லி உன்கேள்வியை இவரிடம் கேளு என்றான் கேட்டுவிட்டேன் பதில் சொல்லுங்கள் விதவைகளை ஹிந்து மதத்தினர் ஒதுக்குவது ஏன் ?



   ங்கள் கேள்வியில் உள்ள ஆதங்கமும் தெரிகிறது ஆக்ரோஷமும் புரிகிறது பிரம்மாவின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமென்றுதான் நமது மதம் சொல்கிறதே தவிற பேதங்களுடையதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை ஆனால் நமது மதத்துக்கே உரிய ஒரு சாபக்கேடு இதில் உள்ளவர்கள் செய்கின்ற தப்புக்கு மதம் பலியாக்கப் பட்டுவிடுகிறது

  உலகிலுள்ள எந்த மதமும் பெண்ணுக்கு கொடுக்காத சிறப்பை அங்கிகாரத்தை இந்து மதம் கொடுத்துள்ளது படைப்பின் அஸ்திவாரமே பெண்மையென்று அவளை அகிலாண்டக்கோடி பிரமாண்ட நாயகியாக்கி வழிபாடு நடத்துவது நம் மதம்தான் சக்தி இருந்தால்தான் சிவம் அவள் இல்லையெற்றால் அவன் வெறும் சவம் என்று கடவுளை விட வலிமையாக்கி காட்டியது நம்மதம் ஆனால் பெண்மையின் மகத்துவத்தை குழிதோண்டி புதைத்து ஆனந்தக் கூத்தாட்டம் நடப்பதும் நம் மதத்தில்தான்

 நல்லவேளை மற்ற மதத்தார் வேண்டுவது போல பெண்களுக்கு ஆடை அடிமைத்தனமும் தனி வழிபாட்டு இடமும் இன்னும் நமது மதத்தில் ஒதுக்கப்பட வில்லை அவ்வளவுதான் மற்றப்படி மனிதனின் சரிபாதியான பெண்மை உலகம் முழுவதும் எத்தகைய துயரங்ஙளைஅனுபவிக்கிறார்களோ அதையேத்தான் இந்தியப்பண்பாட்டிற்கு உட்பட்டு அனுபவித்து வருகிறார்கள்

 ஆனால் ஒன்று மட்டும் உண்மையம்மா! நம் மதத்தின் ஆதார நூல்களான நான்கு வேதங்கள் நூற்றிப்பத்து உபநிஷதங்கள் பிரம்ம சூத்திரம் ஸ்ரீமத் பகவத்கீதை போன்ற எதிலும் விதவைகளை புறம்தள்ளு மொட்டையடி மூலையில் உட்கார வை என எதிலும் சொல்லப்பட வில்லை

  பிற்காலத்தில் உருவான பழக்கமே இது சில குருட்டு மனிதர்களின் வக்கிர புத்தியில் தோன்றிய சாஸ்திரம் இது இதற்கு சமய அங்கிகாரம் எப்போதுமே கிடையாது ஆனால் சில சமயவாதிகள் இதை வாய்கிழிய பேசுகிறார்கள் செயல்படுத்தவும் செய்கிறார்கள் அவர்களை உங்களைப்போன்ற நல்லாத்மாக்கள்தான் மன்னிக்க வேண்டும் ஆனாலும் ஒரு நல்ல விஷயம் அம்மா இப்போது நமது இந்துமக்கள் இந்த விவகாரங்களில் சற்று மென்மையாகவே நடக்கிறார்கள் அதை நினைத்து ஆறுதலடையுங்கள் இன்னும் காலம் செல்ல செல்ல நல்லது பலவும் நடக்கும்


     மேலும் வாசகர் சந்தேகம் படிக்க இங்கு செல்லவும்






Contact Form

Name

Email *

Message *