Store
  Store
  Store
  Store
  Store
  Store

தயவு செய்து பதில் எழுது


அன்புள்ள கடவுளுக்கு

     ம்மா துண்டு தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக்கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.  நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக்கும்.

கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே.  அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும்.  கோடம்பாக்கத்துல மழை வந்துதா?  கோவில்பட்டியில வெயில் அடிக்கிறதா? என்பதையும் பார்த்தாகனும். 


   செத்தது எத்தனை பேரு, புதுசா பொறந்தது எத்தனை பேரு, அவனுக்கு என்ன கதை, என்ன பாத்திரம் என்று பிரிச்சு கொடுத்தாகனும்.

  ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிறுத்து போகிறது.  இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில் உன்னால் படைக்கப்பட்ட இந்த சின்ன ஜீவனின் கடிதத்தை நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

ஆமாம் கடவுளே உனக்கு என்ன பாஷை தெரியும்.  எங்க ஊரு ஐயரு சமஸ்கிருதத்தில பேசுனா தான் உனக்கு புரியும் என்கிறார். 

  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தமிழ் மொழி தான் ஆதி மொழி அது தான் உனக்கு பிரியமானது என்று எங்க ஊரு தமிழ் வாத்தியார் சொல்றார்.   


  இதில் எது நெசம்.  இவங்க இரண்டு பேரும் சொல்கிற மாதிரி தமிழோ, சமஸ்கிருதமோ இரண்டில் ஒன்று உனக்கு தெரியும் என்றே வைத்து கொள்வோம்.  சீனாகாரனும், ஆப்ரிக்காகாரனும் உன்கிட்ட எப்படி பேசுவான்?

   அவனுக்கு தான் தமிழும், சமஸ்கிருதமும் தெரியவே தெரியாதே.  ஒரு வேளை உனக்கு காதுகளே கேட்காதோ? இங்க உள்ளவங்க தான் வீணாக குடுமியை பிடித்து சண்டை போட்டு கொள்கிறார்களோ? இது சம்பந்தமா உன் கருத்து என்னென்னு எனக்கு கண்டிப்பா பதில் எழுது.

இப்ப கொஞ்ச நாளாகவே என் மண்டைக்குள்ள ஒரே குழப்பம்.  எங்க ஊரு கறிகடை பாய் அல்லா மட்டும் தான் ஒரே கடவுள் அவரை விட்டா கடவுளே இல்ல என்கிறார்.  


  அவரு சொல்லுகிற விதத்தை பார்த்தா ஒருவேளை இவரு சொல்வது தான் சரியாக இருக்குமோ என்று ஒரு நிமிஷம் தோணியது. 

 அடுத்த நிமிசமே டீ கடை ராபர்ட் சொன்னது நினைப்பில் வந்து போச்சு.  இந்த உலகில் கர்த்தர் மட்டும் தான் வணங்க கூடிய கடவுள்.  அவரே எல்லா ஜீவன்களின் போஷகராய் இருக்கிறார்.  இப்படி ராபர்ட் சொன்னது சரியா? பாய் அண்ணாச்சி சொன்னது சரியான்னு? புதிய குழப்பமே வந்து போயி இட்லி கடை வைத்திருக்கும் ராகவாச்சாரியாரிடம் அல்லா கடவுளா? கர்த்தர் கடவுளா? என்று கேட்டேன். 

  அவர் ஒரே, போடாக அட போடா அசட்டு அம்பி, அல்லாவும் இல்ல கர்த்தரும் இல்ல.  பெருமாள் தான்டா உண்மை தெய்வம்ன்னு சொல்லி புது குழப்பத்தை உருவாக்கி விட்டார்.


  இத போயி சாதாரணமா ஒரு பைத்தியகாரனின் கேள்வின்னு தூக்கி போட்டுடாத.  நீ படைத்த பூமியில இன்றைக்கு பத்தி எரியும் பிரச்சனை இது தான். 

  ஒரு பக்கம் உள்ளவன் எல்லோரும் மனம் திரும்புங்க.  கர்த்தரை ஏத்துங்க என்று ஆசை வார்த்தை காட்டி பார்க்கிறாங்க.  மசியாதவர்களை கையில ஆயூதத்தை கொடுத்து ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டி சாகுபடியா செய்கிறான்.

இன்னொருத்தனோ அல்லாவ ஏத்துக்காத எவனும் பூமியில வாழ கூடாதுன்னு அங்கங்க குண்டு போடுகிறான்.  கடவுள் படைச்ச உசுருகளை அழிக்கலாமன்னு திருப்பி கேட்டா அல்லாவை வணங்காதவன் எவனும் சாத்தானின் மக்களே அவர்களை கொல்லுவது தான் புனித போர் என்கிறான்.


தொப்பியும் சிலுவையும் தான் முரட்டு தனமா இருக்கிறது என்று காவி வேட்டி கட்டியவனின் பேச்சை கேட்டால் இன்னும் கொடுமையாக இருக்கிறது.  நான் தான் ஆதியில வந்தவன்னு பாதியில் வந்தவன் தான் அவனுங்க இரண்டு பேரும் அவனுங்கள ஒழிச்சு கட்டினா தான் பூமி அமைதியாகும்ன்னு சூலத்த தூக்கி கிட்டு குத்த வரான்.

  இந்த இடத்துல நீ என்ன பார்த்து ஒரு கேள்வி கேட்கலாம்.  ஏன்டா அவனுங்ககிட்ட போன அப்படியும் இல்லாம இப்படியும் இல்லாம நடுவுல இருக்கிறவன் கிட்டையோ கடவுளும் கிடையாது.  மண்ணாங்கட்டியும் கிடையாது என்கிறவன் கிட்டையோ போய் விளக்கம் கேட்க வேண்டியது தானே என்று.

   நீ கேட்பதுவும் சரிதான்.  அப்படிபட்ட மனுஷங்கிட்டையும் போய் கேட்டேன்.  அவன் என்னடான்னா இவனுக மூணு பேரை விடவும் மோசகாரனா இருக்கிறான்.


 ஒருத்தன் சொல்கிறான் அல்லா உசத்தின்னு சொல்கிறவனுக்கும் ஆமாம் போடு, அடுத்தத உசத்தி பேசறவனுக்கு ஆமாம் போடு, ஆனா குறிப்பா நீ போட்ட ஒவ்வொரு ஆமாவுக்கும் கராரா காசை வசூல் பண்ணிடு.  எந்த ஆடு முட்டிகிட்டா நமக்கு என்ன நமக்கு தேவை ரத்த வறுவல் தானே என்று கண்ணை சிமுட்டுகிறான்.

  கடவுளே இல்லை என்பவனிடம் போனேன்.  கடவுள் இருப்பத ஒத்துக்கிட்டா கண்ணுக்கு தெரியாத நியாய தர்மத்தையும் ஒத்துக்கணும். 

  நியாய தர்மம் என்பதே பத்தாம் பசலித்தனம்.  அதன்படி எல்லாம் நடக்க ஆரம்பிச்சா மனுஷனா பிறந்த சுகத்த அனுபவிக்க முடியாது.  வாழ்வது கொஞ்ச நாள் தான்.  அந்த காலத்துக்குள்ள கிடைக்கிறத அனுபவிச்சி செத்து போகப்பாரு  


  வீணா கடவுள் அது இதுயென்று காலத்த வீணடிக்காத என்கிறான்.  ஒவ்வொருத்தனும் தன் சுகத்தையே பெரிசா பார்த்தா உலகம் பூரா சுடுகாடாகத் தானே மாறும்?

அதனால தான் உங்கிட்ட இந்த கேள்விய கேட்க போறேன்.  யோசிச்சு நிதானமா பதில சொல்லு,  ஒண்ணும் அவசரம் இல்லை.
  •  உண்மையிலேயே நீ யாரு?
  • உன் பெயர் என்ன?
  • அல்லாவா? 
  • கர்த்தரா? 
  • பெருமாளா?
   இந்த மூணுமே உன் பெயர் இல்லையின்னா இவங்க மூணு பேரும் யாரு?

   அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?

  நாங்க யாரும் அவுங்கள பார்த்தது இல்ல.  நீயாச்சும் பார்த்து இருக்கியா? நீ சொல்ல போற பதிலில் தான் இந்த உலகத்தோட எதிர்காலமே இருக்கு. 
அடுத்து முக்கியமா இன்னொரு கேள்வி.  ஒரு மனுஷனுக்கு முக்கியமா என்ன வேணும்? மானத்த மறைக்க ஒரு துணி மழைக்கு, வெயிலுக்கு ஒதுங்க ஒரு கூரை பசியெடுத்தா ஒரு பிடி சாதம் அவ்வளவு தான்.  


    ஆனா எங்க நாட்டுல பல பேரு ஊர கொள்ளையடிச்சி கோடி கோடியா மறைச்சு வைக்கிறான்.  சொத்து சுகத்துகாக ஆத்தாளையும், அப்பனையும் கூட வெட்டி மாய்க்கிறான்.  

    இத்தன பணம் மனுஷனுக்கு எதுக்கு? பத்து துணிய ஒரே நேரத்துல போட்டுக்க முடியுமா? பத்து வூட்டுல ஒரே ராத்தியில் படுத்து தூங்க முடியுமா?  பசி வந்தா காச வறுத்து திங்க முடியுமா?  இவை எல்லாம் முடியாதுன்னு எல்லா மனுஷனுக்கும் தெரிஞ்சும் பணத்த நோக்கியே ஏன் ஓடுகிறான்?

  மனுஷன் ஓடுவது இருக்கட்டும் நோய குணப்படுத்தினா, கல்யாணம் பண்ணிகிட்டா? பிள்ளை குட்டி பெத்துகிட்டா உனக்கு கூட உண்டியலில் காசு போட சொல்கிறாயாமே.  உலக பொருட்களில் ஆசை வைக்காதேன்னு உபதேசம் செய்கிற நீயே நகையும் நட்டும் பணமும் காசும் காணிக்கையாக கேட்பது ஏன்? அல்லது உன் பெயரால் யாரோ வசூல் செய்கிறார்கள் என்றால் எல்லாம் தெரிந்த நீ அதை அனுமதிப்பது ஏன்?


  இப்படி இன்னும் ஏராளமான கேள்விகள் பதிலே இல்லாமல் எனக்குள் மலை மாதிரி குவிந்துக்கிடக்கிறது.  அத்தனையும் இந்த ஒரே கடிதத்தில் கேட்டால் பாவம் உனக்கு தலைசுற்றல் வந்து விடும்.

   எங்கள் ஊரில் குடி தண்ணீர் குழாயில் வீட்டுக்கு வருவது இல்லை.  இரண்டு கிலோ மீட்டர் நடந்து போயி தான் தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

  ராத்திரி நேரத்தில் தலைவலி, காய்ச்சல் என்றால் தெருவில் இறங்கி மருத்துவமனைக்கு போக முடியாது.  காரணம் தெருவில் விளக்கு இல்லை.  தெரு நாய் தொல்லை ரோடெல்லாம் ஆளை விழுங்கும் பள்ளம்
 இத்தனையும் தாண்டி டாக்டர் பீஸ் கொடுப்பதற்கு பொண்டாட்டி தாலியை அடகு வைக்க வேண்டும்.  கரண்ட் பில்லோ மூட்டை அளவு என்றாலும் பணத்தை கட்டுகிறோமே தவிர விளக்கெரிக்க கரண்ட் வருவதில்லை. 


  விலையேற்றத்தால் தங்க நகைகளை மறந்து போனது போல காய்கறிகளின் விலையும் ஏறி போனதினால் மாதத்தில் ஒரு நாள் தான் சாதத்திற்கு சாம்பாரே கிடைக்கிறது. வெங்காயம் கத்தரிக்காய் என்ற பெயர்களை மறந்து போச்சி

 ஸ்கூல் பீஸ் கட்டி மாளாது என்பதினால் எங்களில் பலர் பிள்ளைகளை பெற்று கொள்வதையே விட்டுவிட்டோம்.

   ஆகாய உசரத்திற்கு மண்ணு விலை ஏறி போனதினால் சொந்த வீடுன்னு நினைச்சு பார்க்கவே முடியாது. 

  வாடகை வீட்டுக்கு பணம் கொடுத்தே பாதிப்பேர் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டோம். 

  வயசுக்கு வந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கனவுல கூட முடியல.

  படிச்ச பசங்களோட உள்ளங்காலும் செருப்பும் வேலை தேடியே தேய்ந்து போனது. 

 எங்க ஊரு தலைவருங்க தங்கள் பேரன் பேத்திக்கும் பெற்ற மக்களுக்கும் பதவி கிடைக்கலைன்னா அரசாங்கத்தைமே மிரட்டுவாங்க

  தப்பித் தவறி ஊழல் செய்து மாட்டிக்கிட்டா ஜாதிப் பெயரைச் சொல்லி தப்பிக்க பார்ப்பாங்க

  தன்னோட கட்சி வளருவதற்காக மதச்சண்டைகளை தூண்டி விடுவாங்க

  இத்தனை நெருக்கடியில் தான் உனக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.  என் நெருக்கடி எப்போதுமே தீரபோவதில்லை.  என் தலையெழுத்து இப்படி தான்.  ஆனாலும் நீ சிறிது ஆறுதலை நான் அடைந்து விட்டு போகட்டுமே என்று தயவு செய்து பதில் எழுது.  அரசியல்வாதி பெற்ற விண்ணப்பத்தை குப்பை கூடையில் போடுவது போல் போட்டு விடாதே.

                                                            http://www.toonpool.com/user/849/files/penetrating_pen_91585.jpg  இப்படிக்கு சாமான்ய மனிதன்                                                        


Contact Form

Name

Email *

Message *