Store
  Store
  Store
  Store
  Store
  Store

எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

   ரசியல்வாதிகள் மேடையேறி விட்டாலே மடை திறந்த வெள்ளம் போல பேசுவார்கள்.  அவர்கள் பேச்சில் ஈட்டிகள் பறக்கும்.  வாள்கள் மோதும், பீரங்கிகள் முழங்கும்.  கேட்பவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து விதிர்விதிர்த்து போவார்கள்.  சிலபேருக்கு உணர்ச்சி என்ற பாம்பு படமெடுத்து ஆடி வீரம் என்ற மாணிக்கத்தை கூட கக்கும்.

 அதே அரசியல்வாதி மேடையை விட்டு இறங்கினால் பழம் வெட்டும் கத்தியை கூட கண்டு படபடத்தும் போவார்கள்.  மேடையில் வந்த வீரம் எங்கே போனது என்று நமக்கு தோன்றும்.  அவரிடமே உங்கள் வீரமெல்லாம் வெறும் வார்த்தை தானா?  நடைமுறையில் கிடையாதா?  என்று கேட்டால் சிரித்து மழுப்பி விடுவார்கள்.  அதற்கு காரணம் என்ன?


மேடை மீது ஏறிவிட்டால் சுற்றிலும் மக்கள் இருக்கிறார்கள்.  குறைந்தபட்சம் அவர்களை கோபப்படுத்தாத வரை நமக்கு ஏதும் நேராமல் பாதுகாப்பார்கள் மீறி போனால் போலிஸ்காரர்கள் பந்தோபஸ்து தருவார்கள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

 இப்படி தன்னை நம்பாமல் மற்றவர்களை நம்பும் இயல்பு யாரிடம் இருந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.  துணிச்சல் மிகுந்தவனே வெற்றியாளனாக, தலைவனாக உயர முடிகிறது.  அறிவும், திறமையும் பல அரசியல் வாதிகளிடம் இருந்தும் அவர்களால் முன்னுக்கு வர முடியாமல் இருப்பதற்கு இதுவே மூல காரணமாகும்.

அரசியல் வாதியாக இருக்கட்டும் நிர்வாகிகளாக இருக்கட்டும், வியாபாரிகளாகவே இருக்கட்டும், அவர்கள் அனைவரும் தங்களது துறைகளில் வெற்றியடைய, முடி சூட்டிக் கொள்ள துணிச்சல் என்பது அத்தியாவசிய தேவையாகும். 


  என்னிடம் துணிச்சல் இருக்கிறது.  செயல் வேகம் இருக்கிறது எல்லாம் இருந்தும் என்னால் வெற்றி பெற முடியவில்லையே என்று சிலர் சொல்வார்கள்.

 எங்கு போனாலும் பணம் வேண்டும் சார், பணம் மட்டும் இருந்து விட்டால் ஈடுபடும் காரியங்கள் எல்லாம் வெற்றியாக முடிந்து விடும் என்று சிலர் பேசுவார்கள்.

  பணம், பதவி, திறமை இவையெல்லாம் சும்மா பேச்சுக்குத் தான்.  எதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும் என்றும் சிலர் கூறுவார்கள்.  இத்தகைய கருத்துக்களை கேட்கும் போது இவைகளும் சரிதானே என்று நமக்கு தோன்றும்.  இவைகள் சரிதான் ஆனால் இவற்றில் எது மிகவும் சரி என்பதை தீர்மானிக்க வேண்டும்.

விதி, பூர்வ ஜென்ம கர்மா போன்ற மிக பெரிய விஷயங்களை ஓரங்கட்டி வைத்து விட்டு சற்று ஆழமாக சிந்தித்தால் கடவுள் மனிதர் அனைவரையும் சமமாகவே படைத்துள்ளார்.  ஒவ்வொரு மனித பிறவிக்குள்ளும் வெற்றி என்பது மறைந்து கிடக்கிறது என்பது புலனாகும். 


 எவன் ஒருவன் தனது சுய தன்மையை உணர்ந்து தைரியமாக செயல்படுகிறானோ அவனே வெற்றி பெற்றிருப்பதும் தெரியவரும்.  நமது சுய தன்மை என்ன? நம் திறமை எது? என்பதை உணராமல் வேகமாக செயல்பட்டு எந்த பயனும் இல்லை.

 நம்மில் பலருக்கு தனக்குள் இருக்கும் தனித்தன்மையே என்னவென்று தெரியாது.  விவசாயம் செய்வதில் தான் என்னுடைய ஆர்வம்.  ஆனாலும் நான் வழக்கறிஞருக்கு படித்து விட்டேன்.  காலையிலேயே அலுவலகம் வந்து இரவு வரை காத்திருக்கிறேன்.  ஒரு வழக்கு கூட என்னிடம் வரவில்லை.  வாழ்க்கையின் பாதியை இப்படியே ஓட்டிவிட்டேன்.  என்னோடு படித்தவன் எல்லாம் எப்படி எப்படியோ இருக்கிறான்.  நான் மட்டும் தான் பள்ளத்தில் கிடக்கிறேன்.  என்னால் ஆர்வமுள்ள விவசாயத்தையும் செய்ய முடியவில்லை.  என்று உங்கள் நண்பரோ பக்கத்து வீட்டுக்காரரோ புலம்புவதை கேட்டு இருப்பீர்கள்.

அந்த மனிதன் குற்றமென்ன?  அவருக்கு பணம் இல்லாததினால் முன்னேற முடியவில்லையா?  கடவுளின் கருணை என்ற அதிர்ஷ்டம் இல்லாததினால் உயர முடியவில்லையா?  நிஜமாகவே அவர் முன்னேற்றத்திற்கு, முட்டுக்கட்டை எது? என்பதை தீவிரமாக சிந்திக்க வேண்டும்.  இவரிடம் பணமும் அதிர்ஷ்டமும் இருந்திருந்தால் மட்டும் வெற்றியை பெற்று இருப்பாரா?  நிச்சயமாக கிடையாது.


முதலில் விவசாயத்தின் மேல் ஆர்வத்தை வைத்து கொண்டு வக்கில் தொழிலுக்கு வந்ததே தவறு.  நான் என்ன பண்ண முடியும்.  அப்பாவிடம் தலைப்பாடாக அடித்துக் கொண்டேன்.  என் பேச்சை காதில் போட்டாரா?  நீ கல்லூரிக்கு போகவில்லை என்றால் நான் கல்லறைக்கு போய் விடுவேன் என்று மிரட்டினார்.  வேறு வழியில்லாமல் புத்தகத்தை சுமந்தேன் என்று அவர் பதில் சொல்லலாம்.

சின்ன வயதில் வேறு வழியில்லாமல் தந்தையான் சொல்லுக்கு கட்டுபட்டு இருக்கலாம்.  வயது வந்த பிறகு முடிவு எடுக்கும் அறிவு வளர்ந்த பிறகு நமக்கு இந்த வக்கில் தொழில் சரிபட்டு வராது என்று வயல் வெளிக்கு போகலாமே ஏன் போகவில்லை? 

அவரால் போக முடியாது.  போவதற்கு அவருக்கு மனம் இல்லை.  சில வருட கால படிப்பு போலி கௌரவத்தை சட்டை காலரில் ஒட்ட வைத்து விட்டது.  வக்கில் படித்தவன் வரப்பு வெட்டுவதா? என்ற வீண் ஜம்பம் அவர் மனதை ஆக்கிரமித்துவிட்டது.

 மின் விசிறியில் வரும் காற்றை அனுபவித்த உடம்புக்கு உச்சி வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ளும் தெம்பு இல்லை.  கௌரவத்திற்கும், ஆர்வத்திற்கும் நடைபெறும் இழுபறி போட்டியில் தீர்க்கமான முடிவு எடுக்க அவருக்கு துணிச்சல் இல்லை.  இது தான்- இந்த தயக்கம் தான் பல பேரை தோல்வி பயத்தில் தள்ளி துயர மண் போட்டு மூடி வைத்திருக்கிறது.


விமான படையில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு இளைஞன் என்னிடம் வந்தான்.  தனது வேலைக்கான ஒப்பந்த காலம் முடிந்து விட்டது இன்னும் நான்கு வருடம் தொடர்ந்து பணியாற்ற புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.  ஒப்பந்தம் போடாமல் வேலையில் இருந்து வெளிவந்து தனியார் துறையில் பணியாற்றலாமா அல்லது இன்னும் சில காலம் விமான படையிலேயே பணி புரிவதா என்று ஒரே குழப்பமாக இருக்கிறது.  என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.  எனக்கு ஒரு நல்ல தீர்வை தாருங்கள் என்று அவன் என்னிடம் கேட்டான்.

தொடர்ந்து பணியாற்றுவதில் என்ன சிரமம்? வெளியே வருவதில் என்ன லாபம்? என்று அவனிடம் நான் கேட்டேன்.  விமான படையிலேயே தொடர்ந்து பணியாற்றுவதில் எந்த சிரமமும் இல்லை.  வேலைகளில் நல்ல அனுபவம் ஏற்பட்டு விட்டதினால் அது சுமையாக தெரிய போவதில்லை.  ஊதியமும் திருப்பியளிப்பதாகவே உள்ளது.

 ஆனால் வெளியில் தனியார் உத்தியோகத்தை ஏற்று கொண்டால் போட்டி மிகுந்த உலகில் பல புதிய விஷயங்களை கற்று கொள்ளலாம்.  இன்னும் சற்று அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.  இருப்பினும் தனியார் வேலைகளில் உத்தியோக பாதுகாப்பு கிடையாது.  ஓய்வு என்பதும் இருக்காது.  என்றான்.


நான் அவனிடம் நன்றாக யோசி வெளியில் வந்த பிறகு உள்ளேயே இருந்திருக்கலாமே என்று எண்ணுவதும் உள்ளேயே இருந்து கொண்டு வெளியில் சென்றால் நன்றாக இருந்திருக்குமோ என்று எண்ணுவதும் உன் திறமையை மழுங்கடித்து விடும்.  உள்ளேயா?  வெளியேயா?  என்ற முடிவை குழப்பமே இல்லாமல் யோசித்து விரைவில் எடு என்று சொன்னேன்.  அதன் பிறகு எனது தனிப்பட்ட எண்ணத்தை அவனிடம் தெரிவித்தேன். 

இதை இங்கே ஏன் சொல்ல வருகிறேன் என்றால் முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் தயங்குவதும் மயங்குவதும் நம்மை கீழ்மைப்படுத்தி விடும்.  அப்படியாகி விடுமோ இப்படியாகி விடுமோ என்ற கற்பனையான அச்ச உணர்வே பல நேரங்களில் நம்மை குழப்பி குப்புற தள்ளிவிடுகிறது. 


  எனவே இந்த அச்சத்தை தூர தூக்கி போட்டு விட்டு எது வந்தாலும் எந்த கஷ்டம் நேரிட்டாலும் அதை நான் எதிர் கொள்வேன்.  அதை சமாளிக்க என்னால் முடியும் என்று நினைப்பே தலைவனாகும் தகுதியை கொடுக்கும்.

  அபாயத்தை கண்டு பயந்து ஓடுபவன் கோழை, துணிந்து எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்.  இந்த வீரனை தான் கடவுளுக்கு பிடிக்கும்.  அவனுக்காக இறைவன் விதியையே மாற்றுவான்.  எனவே துணிச்சலுடன் பேசுவதை விடுங்கள்.  துணிச்சலுடன் செயலில் இறங்குங்கள்.  வெற்றி உங்களுக்காக காத்திருக்கும்



Contact Form

Name

Email *

Message *