Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாம்பை அடி! அது வெற்றியை தீண்டும்

  மேல் நிலை பள்ளி படிப்பை முடிக்கும் போது அந்த பெண் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள்.  ஆசை ஆசையாய் கல்லூரி வாசலை தொட்டவளுக்கு ஆரம்பம் உற்சாகமாக தான் இருந்தது.

 ஆறு மாதம் சென்ற பிறகு கல்லூரி போக வேண்டும் என்று நினைத்தாலே உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.  ஜுரம் வருவது போல் இருந்தது.  பேசாமல் படுத்துக் கொள்ளலாம் என தோன்றியது. 

அவளை பெற்றவர்கள் பிள்ளைக்கு என்னவோ ஆகிவிட்டது என பதைபதைத்து போனார்கள்.  கல்லூரியில் நடக்க கூடாதது எதுவோ நடந்து விட்டதோ அதனால் தான் அவள் சொல்ல முடியாமல் துடிக்கிறாளோ என்று பல விபரீத கற்பனைகளும் அவர்களுக்கு தோன்றிவிட்டது.

 கடைசியில் விசாரித்து பார்த்தால் அவள் இதுவரை படித்தது தமிழ் வழி கல்வி.  கல்லூரியில் தான் முதன் முறையாக எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது.


 அவளுக்கு ஆங்கிலம் தெரியும்.  ஆனால் ஆங்கில வழியிலேயே படித்த சக மாணவிகளோடு போட்டி போட்டு முன்னேற முடியவில்லை.

 இந்த இயலாமை அவள் மனதிற்குள் போராட்டமாக உருவாகி மனதை கெடுத்து உடம்பையும், படிப்பபையும் கூட கெடுக்க ஆரமித்து விட்டது.

தமிழ் வழியில் படித்துவிட்டு திடீர் என்று ஆங்கில வழிக்கு போனால் என்ன?  சில காலம் சிரமாக இருக்கும்.  சற்று அதிகபடியான கவனத்தை வைத்து படிக்க ஆரம்பித்தால் நாளாவட்டத்தில் சரியாகி விடும்.

  இதை வைத்து பக்கத்தில் இருப்பவர்கள் கேலி பேசுகிறார்களோ இல்லையோ அய்யோ எனக்கு தெரியவில்லையே இது வெளியில் தெரிந்து விட்டால் எல்லோரும் கைகொட்டி சிரிப்பார்களே.  தலை நிமிர்ந்து நடக்க முடியாதே என்று வீணான கற்பனைகளை மனதிற்குள் வளர்த்து கொண்டு பல மாணவர்கள் தங்களது படிப்பை கெடுப்பதோடு மட்டுமல்ல வருங்கால வாழ்க்கையில் ஏற்றப்படும் தீபங்களையும் அனைத்து விடுகிறார்கள். 


 இவர்களாவது சின்ன பிள்ளைகள்.  கல்லூரி வாழ்க்கை என்பது தான் அவர்களுக்கு ஏற்படும் முதல் வெளி அனுபவம்.  சரியான வழிகாட்டுதல் இருந்தால் திருந்த வாய்ப்பு உண்டு.

 பல பெரியவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நினைத்தாலே நமக்கு எரிச்சல் வரும். 

மின்சார கட்டணம் செலுத்த வரிசையில் நிற்பார்கள்.  அவர்களுக்கு பின்னால் வருபவர்கள் எல்லாம் முட்டி மோதி கட்டணம் செலுத்திவிட்டு செல்வார்கள்.  இவர்கள் மட்டும் கடைசி வரை காத்திருந்து கட்டுவார்கள்.

  வரிசையில் நீங்கள் தானே முன்னால் நின்றீர்கள்.  மற்றவர்கள் கட்டும் முன் பணம் கட்டியிருகலாமே என்று கேட்டால் பதில் சொல்ல தயங்குவார்கள்.

 வார்த்தைகளை மென்று விழுங்கி மற்றவர்கள் முந்தும் போது நான் என்ன செய்ய முடியும் என்பார்கள். 


 சாதாரண மனிதர்களிடம் மட்டுமல்ல மிக பெரிய மனிதர்களிடம் கூட ஏதோ ஒரு வகையில் தாழ்வு மனபான்மை இருக்கிறது.

 இது அவர்களை வெற்றி படிக்கட்டில் முழுமையாக ஏற தடையாகவே இருக்கிறது.  இதில் வேடிக்கை என்னவென்றால் தங்களிடமுள்ள தாழ்வு மனப்பான்மையை போக்க முயல மாட்டார்கள்.  பலருக்கு அப்படியொரு குறை தன்னிடம் இருப்பதே தெரியாது.

தாழ்வு மனபான்மையின் சிகரமாக சிலர் இருப்பார்கள்.  மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ, எப்படியெல்லாம் பேசுவார்களோ நாம் இல்லாத இடத்தில் கேலியும் கிண்டலுமாக விமர்சிப்பார்களோ என்று பலவாராக எண்ணி எந்த செயலையும் ஊக்கத்துடன் செய்ய மனமின்றி வாழ் நாள் முழுவதும் இழக்க கூடாததை இழந்தது போல் அலைவார்கள்.

 இது தான் சிகரமான தாழ்வு மனபான்மை.  பக்கத்து வீட்டுக்காரன் சதாசர்வ காலமும் நம்மை பற்றியே நினைத்து கொண்டு இருக்கிறான் நான் தோல்வியடைவதற்காகவே பல செயல்களை செய்கிறான் என்று நினைப்பதே மடமையாகும்.  இந்த மடமை நமக்குள் வளர வளர பொறாமையும் மந்த புத்தியும் நம்மை கரையான்  போல அரித்து சாகடித்து விடும்.

நேற்று வரை கைவண்டி இழுத்த ராகவன் இன்று மளிகை கடைக்கு சொந்தகாரனாகி விட்டான். 

தெருவில் பூ விற்று கொண்டிருந்த முனியம்மா இலட்சாதிபதியாகி விட்டாள். 


 அவர்களை போல நாமும் உயர வேண்டும் என்று நினைப்பது தவறாகாது. சொல்லப் போனால் அந்த எண்ணமே நமது முயற்சிக்கு உந்து சக்தியாக இருக்கும்.

அய்யய்யோ அவர்கள் மட்டும் முன்னேறி விட்டார்களே அவர்களுக்கு மட்டும் எல்லா வாய்ப்புகளும் வந்தமைகிறதே என்று பொறாமைபடுவது எந்தளவு தவறானதோ அதைவிட பல மடங்கு தவறுதலானது அவர்களால் மட்டும் தான் முன்னேற முடியும் நம்மால் ஆகாது, நமக்கு அந்த தகுதியில்லை என்று நினைத்து ஒதுங்கி கொள்வதாகும்.

 இப்படிப்பட்ட ஒதுக்கம் மனிதனை மனித வாழ்வை ஒடுக்கி விடும்.

 நம்மை விட அறிவில் சிறந்தவர்களாக மற்றவர்கள் இருக்கலாம்.  உடல் பலம் அதிகமாகவும் அவர்களுக்கு இருக்கலாம்.  பணம், பதவி, அந்தஸ்து இப்படி எல்லாவற்றிலும் சிறந்தவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் அவர்கள் இருக்கலாம்.  


ஆனால் அவர்களிடம் இல்லாத ஏதோ ஒரு விஷேச சக்தி நம்மிடம் இருக்கிறது.  அதை உணர்ந்து கொண்டால், என்னதென்று தெரிந்து கொண்டால் நாமும் அவர்களை போல அல்ல அல்ல அவர்களை விட பல மடங்கு முன்னேற்றத்தை அடையலாம்.

இறைவன், படைப்பில் எந்த மனிதனும் திறமையற்றவன் அல்ல.  மன நோயாளிகளுக்கு உள்ளே கூட ஏதாவது திறமை மறைந்திருக்கும்.

 நமக்குள் இருக்கும் தனித்தன்மையை ஒன்று நாமாக உணர வேண்டும் அல்லது மற்றவர்கள் சுட்டி காட்டுவதை ஒத்துக் கொண்டு முன்னேற பார்க்க வேண்டும்.

 எந்த நேரத்திலும் பிறர் உழைப்பில் நான் வாழ மாட்டேன் என்ற உறுதி இருக்கும் எவனும் தாழ்ந்து போக மாட்டான்.

 யாராவது என்னை காப்பாற்றுவார்கள் என்று நினைப்பவன் வாழ் நாள் முழுவதையும் வீணாக்கி விடுவான்.

முன்னேற்றம் என்ற வார்த்தையை தவறாக பொருள் படுத்தி கொள்வது நம்மில் பலருக்கு வாடிக்கையாகி விடுகிறது.

 பொதுவாக முன்னேற்றம் என்றாலே பணக்காரனாகயிருப்பது. 


 பணக்காரர்கள் தான் முன்னேறியவர்கள் என்றால் கணித மேதை ராமானுஜம் உழைப்பிற்கும், கண்ணதாசனின் உழைப்பிற்கும் அர்த்தம் என்பதே கிடையாது.

 நான் பிறந்த கிராமத்தில் கருத்தையா நாடர் என்று ஒருவர் இருந்தார்.  காமராஜரும் அவரும் மிக நெருங்கிய நண்பர்கள்.  காமராஜரை பெயர் சொல்லி கூப்பிடும் தகுதி பெற்றவர்களில் அவரும் ஒருவர். 

அவர் எங்கள் பகுதி ஒன்றிய பெருந்தலைவராக இருந்த காலத்தில் தான் பல கிராமங்களுக்கு மின்சார விளக்குகள் வந்தன.  சாலைகள் போடப்பட்டன.  குடிநீர் விநியோகமும் கிடைத்தது.  பல பள்ளிக்கூடங்களும் கட்டப்பட்டன.

 அவர் மறைந்த போது இந்திய பிரதமரிடம் இருந்தே அனுதாப செய்தியும், மலர் வளையமும் வந்தது.

 இத்தனைக்கும் அவர் ஒரு தனிப்பட்ட ரீதியில் பரம ஏழை.  ஒரு ஓலை குடிசையும், பழைய சைக்கிள் ஒன்றும் தான் அவருக்கு என்று இருந்த தனிப்பட்ட சொத்து.

  இத்தனை காலத்திற்கு பிறகும் அவர் பெயருக்கு இருக்கும் மரியாதை அந்த பகுதியில் குறையவே இல்லை.

 அந்த ஏரியாவில் அன்றும் சரி, இன்றும் சரி பல கோடிஸ்வரர்கள் இருந்தார்கள்.  இருக்கிறார்கள்.

 அவர்களின் பெயரை சொந்த பேரன் காலம் வரையுமாவது சொல்வார்களோ என்பது கேள்வி குறியாகும்.

ஆனால் கருத்தையா நாடார் பெயரை இன்னும் பல காலம் சொல்லுவார்கள்

  இப்படி எத்தனையோ உதாரணங்களை பணம் மட்டும் தான் முன்னேற்றம் அல்ல என்பதற்காக சொல்லி கொண்டே போகலாம். 

ஆனால் நாம் பணம் இல்லாதவன் என்று சோம்பேறித்தனமாக முடங்கி கொள்கிறோம்.  இது தான் தாழ்வு மனப்பான்மையின் கௌரவமான வெளித்தோற்றம்.

என்னிடம் தாழ்வு மனப்பான்மை இருப்பது நன்றாக தெரிகிறது.  அதை விலக்கிக் கொள்ள எந்த மார்க்கமும் தெரியவில்லை.  அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்.

 தாழ்வு மனப்பான்மை விலக்கி கொள்ள சொற்பொழிவுகள் கேட்பதோ புத்தகங்களை படிப்பதோ மட்டும் பயன் தராது.

 நான் கடவுளால் படைக்கப்பட்ட உன்னத பிறவி எத்தனை சுழற்காற்று அடித்தாலும் நெருப்பு மேல் நோக்கி கிளமம்புவது போல் நான் முன்னேறுவதற்காக மட்டுமே படைக்கப்பட்டவன் என்ற எண்ணம் மனத்திற்குள் நிஜமாகவே எழும்ப வேண்டும்.

  அப்படி எழும்ப மறுக்கும் போது வலுக்கட்டாயமாகவாவது அந்த சிந்தனை மீண்டும் மீண்டும் கொண்டு வரவேண்டும்.

 நம் மனம் செத்த பாம்பு அல்ல எத்தனை அடி அடித்தாலும் ஒரே இடத்தில் கிடப்பதற்கு

அது உறங்கும் பாம்பு.  எதாவது ஒரு அடி அதை உசுப்பி விட்டுவிடும்.  சீறிக் கொண்டு மனபாம்பு கிளம்பிவிட்டால் லட்சியத்தை கொத்தி முழுமையான விஷமாக்காமல் ஓயவே ஓயாது.

உற்சாகமும் சுறுசுறுப்பும் லட்சிய வேகமும் கொண்ட மனிதர்களே போட்டி மிகுந்த இச்சமூக சூழலில் பல இடர்பாடுகளை சந்திக்கிறார்கள் என்றால்

 என்னால் செயல்பட முடியுமா?  என்று தயங்குபவர்களுக்கு நிச்சயம் பட்டு கம்பளம் விரித்து யாரும் தரமாட்டார்கள்.

 ஒன்றுமே செய்யாமல் எந்த முயற்சியும் இல்லாமல் துருபிடித்து மடிவதை விட சவால்களை எதிர்கொண்டு தோற்று போவது கூட ஒரு வித வெற்றி தான்.

  இப்படியான சிந்தனை வந்துவிட்டால் தாழ்வு மனப்பான்மை என்பதே நம்மை விட்டு ஓடி விடும்.

  அப்படியும் ஓடாது நம்மை பிடித்து அது தாழ்த்தியே தான் தீரும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன்.

 முதலில் உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்ததே ஒத்து கொண்டதே பாதி வெற்றி.

மீதம் இருப்பதிலும் வெற்றி பெற புத்தகங்கள் படிப்பது, கனவு காண்பது தியானம் செய்வது என்பது போன்ற பழக்கங்கள் உங்களிடம் இருந்தாலும் அதை தற்காலிகமாக நிறுத்துங்கள்.

 காலை, மதியம், மாலை என மூன்று வேளையிலும் மூச்சி பயிற்சி என்ற பிராண யாமம் செய்யுங்கள்.

 தொடர்ச்சியான பிராண யாமம் உங்கள் நாடி நரம்புகளை சுத்தப்படுத்தும்.  நரம்புகளில் புது ரத்தம் பாயும்.  உடம்பில் இனம் புரியாத சுறுசுறுப்பு ஏற்படும்.  மன தெளிவு ஏற்படும்.

  அதன் பிறகு பாருங்கள் தாழ்வு மனப்பான்மையெல்லாம் நெருப்பில் விழுந்த குப்பைகளை போல சாம்பலாகி போகும்.

சோர்வை சாம்பலாக்கினால் தான் வாழ்வு சரித்திரமாகும் என்பதை மறவாதீர்கள்.



Contact Form

Name

Email *

Message *