Store
  Store
  Store
  Store
  Store
  Store

செத்த வீட்டிலும் பண்பாட்டுத் தென்றல்

அரசியல் வகுப்பு  4
   மது இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலுள்ள பண்பாடுகள் எவற்றை எடுத்துகொண்டாலும் தமிழ்ர்களின் பண்பாட்டை ஒரு படி மேலே சொல்லலாமே தவிர தாழ்த்தி சொல்லவோ, சமப்படுத்தவோ முடியாது. என் அம்மா உயர்ந்தவள் , அவளுக்கு இணையான மனிதர்களே உலகத்தில் கிடையாது என்று நான் சொன்னால் அதில் அதிசயமில்லை. காரணம் என் தாயின் குறை என் கண்ணில்படாது. ஆனால் பக்கத்து வீட்டுகாரன் ஒருவன் எனது தாயாரை பற்றி இதே கருத்தை சொன்னால் எனக்கு பெருமை தானே.

 நமது தமிழக பண்பாட்டை மேல் நாட்டு அறிஞர்கள் போற்றி புகழ்கிறார்கள் என்று நம்மவர்கள் பேசும் போது கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தாலும் கூடவே ஒரு எண்ணம் வரும் ஒரு வேளை நம்மை போன்ற சாதாரண மக்களின் கௌரவ உணர்வை அதிகப்படுத்துவதற்காக இப்படி சொல்கிறார்களோ என்று ஆனால் அதே மேல் நாட்டார் நேருக்கு நேராக நமது பண்பட்டை பாராட்டுவதை கேட்கும் போது அவ்வளவு செறிவுமிக்க கலாசாரத்தின் சொந்தகாரனா நான் என்ற பெருமிதம் பீறிட்டு எழுத்தான் செய்கிறது

  2009- ம் வருடம் நல்ல மழைகாலம் இத்தாலி நாட்டில் இருந்து அர்மாண்டோ என்பவர் என்னை சந்திக்க வந்திருந்தார், வேதங்களைப் பற்றிய சில தெளிவை பெறவும் இந்திய மந்திர சாஸ்திரத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளவும் ஒரு வார காலம் நமது ஆஸ்ரமத்திலேயே தங்கி இருந்தார்,  கடைசியாக அவர் தன் சொந்த நாட்டிற்கு கிளம்பும் போது கண்ணீர் விட்டுவிட்டார் எங்கள் ஊரில் 18.20 வயது வந்துவிட்டாலே பெற்றோரிடம் இருந்து பிரிந்து விடுவேம்.  அதற்கு மேலும் வீட்டில் தங்குவதாக இருந்தால் கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும்.சில சமயம் பெற்றோர்கள் நான் இருப்பதை இடஞ்சலாக கருதினால் சீக்கிரம் வேறு இடம் பார்த்துக்கொள் என வாடகை வீட்டுகாரனை காலி செய்ய சொல்வது போல் சொல்வார்கள் 


பெற்றோர், பிள்ளைகள் உறவே இப்படியென்றால் அண்ணன் தம்பி, அக்காள் தங்கை உறவுகளை பற்றி சொல்லவே வேண்டாம், அத்தை, பாட்டி மாமன், மச்சான் என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது ஆனால் கடவுள் உங்களுக்கு இத்தகைய வரங்களை தாராளமாக அள்ளி கொடுத்திருக்கிறான் என் காலில் காயம்பட்டால் நான்தான் ரத்தத்தை துடைக்க வேண்டும், நானே தான் எழுந்து மருத்துவமனைக்கு போக வேண்டும் ஆனால் இங்கு ஒருவனுக்கு தலைவலி என்றால் மருந்து தடவ எத்தனை கைகள் வருகிறது எங்கள் ஊரில் சாலை விதிகளை தீவிரமாக கடைபிடிப்போம் ஆனால் உறவு விதிகளை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது நான் பிறந்ததின் முழு அர்த்தத்தையும் இங்கிருந்த ஏழு நாட்களில் முழுமையாக புரிந்து கொண்டேன் என்று நா தழுதழுக்க அவர் கூறிய போது தான் நமது உறவு முறையில் உள்ள உண்மையான பண்பாட்டு வெளிச்சம் எனக்கு தெரிய ஆரம்பித்தது,

        தென் தமிழகத்தில் ஒரு கடலோர கிராமத்தில் ஒரு சாவு வீட்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் பல முறை மேடைகளில் பேசி இருக்கிறேன், பல முறை எழுதியும் இருக்கிறேன் எத்தனை முறை பேசினாலும் எழுதினாலும் சலிப்பு தட்டாத விஷயம் அது,

திருமணம் முடிந்து நான்கே மாதத்தில் ஒரு இளைஞன் சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டான் இறுதிகாரியங்களுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கொண்டிருந்தது வெளிமுற்றத்தில் பச்சை மூங்கிலில் பாடைகட்டி வைக்கப்பட்டிருந்தது அந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்து வயதான பெண்மணி ஒருவர் கையில் தண்ணீர் சொம்புடன் வெளியில் வந்தார் வந்தவர் பாடையின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து மடியில் இருந்து ஒரு மல்லிகை மொட்டை எடுத்தார் அதை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தூக்கி காண்பித்து விட்டு தண்ணீர் சொம்பிற்குள் போட்டார். அப்படியே ஒவ்வோன்றாக வேறு இரண்டு மல்லிகை மொட்டுகளையும் எடுத்து தண்ணிரில் போட்டுவிட்டு மொத்தம் மூன்று என உரத்த குரலில் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்,


   தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான சடங்கு முறைகள் உண்டு அதிலும் மரண சடங்குகள் ஜாதிக்கு  ஜாதி குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடும் ஆனால் எவற்றிலும் இப்படி ஒரு சடங்கை இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை அந்த சடங்கிற்கான அர்த்தமும் எனக்கு தெரியவில்லை அதனால் அருகில் இருந்த உள்ளுர்காரர் ஒருவரிடம் இது என்ன புதிய சடங்கு என விவரம் கேட்டேன்

 அதற்கு அவர் செத்து போனவன் இளவயதுகாரன் இப்போது தான் திருமணம் முடித்தவன் அவன் மனைவியும் சின்ன பெண்தான். கணவன் மனைவியாக சொற்பகாலம் வாழ்ந்தாலும் அந்த பெண் கர்ப்பவதியாக இருப்பாள் இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்கும் போது புருஷன் செத்து பல நாள் ஆனது போல் இருக்கிறதே இந்த குழந்தை எப்படி பிறந்தது என்று எதாவது ஒரு இறக்கமற்ற மனிதன் பேசிவிட்டால் புருஷனை பறிகொடுத்த பெண்ணின் மனது என்ன பாடுபடும் அதனால் தான் சாவு அன்றைக்கே ஊரும் உற்றாரும் கூடியிருக்கும் நேரத்திலேயே அந்த பெண் மூன்றுமாத கர்ப்பிணியாக இருக்கிறாள் என மூன்று பூ மொட்டுகளை காட்டினார்கள் என்று விளக்கம் சொன்னார் ஒரு மனிதனுடைய கலாச்சாரம் எப்பளவு மேம்பட்டதாக இருந்திருந்தால் இப்படியோரு சடங்கை உருவாக்க முடியும்?

        நமது பண்பாட்டு நடைமுறை என்பது ஒவ்வொரு நிகழ்விலும் தனக்குள் ஆழமான கருத்துக்களை புதைத்து வைத்திருக்கிறது வீட்டுக்கு சாணம் போட்டு மெழுகுவதிலிருந்து கோலம் போடுவது வரை கூட பரோபகாரத்தையும் ஆரோக்கியத்தையும் சிந்தித்தவன் தமிழன் இந்த சிந்தனை புதியதாக நேற்றோ அல்லது அதற்கு முந்திய நாளோ உருவாகியிருக்க முடியாது பல்லாயிரகணக்கான வருஷங்கள் சிந்தித்து சிந்தித்து செயல்படுத்தினால் ஒழிய அது இத்தனை காலம் தாக்கு பிடிக்க முடியாது


  நமது தமிழ் பண்பாட்டின் வயது கடலில் முழ்கி போன லெமோரியா கண்டத்தின் காலமான கி.மு. 8000-லிருந்து துவங்குவதாக சொல்கிறார்கள் லெமோரியா கண்டம் இருந்ததா அழிந்ததா? என்பது ஆய்வு செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் நம் கையில் இல்லை அதனால் கி.மு.2500 வாக்கிலுள்ள சிந்துசமவெளி நாகரிகம் காலம் தான் நம் பண்பாட்டை கணக்கிட வேண்டுமென்று சிலர்  நினைக்கிறார்கள்

 ஆதிச்சநல்லூர் அகழவ்ராயச்சி கி.மு.1200 காட்டுகிறது. அது தான் நம் மரபின் துவக்ககாலம் என்று சிலரும் அரிக்கைமேடு அகழ்வராய்ச்சி கி.பி.100 -ஐ காட்டுகிறது. அதை தான் தமிழர் பண்பாட்டின் ஆரம்ப கட்டமாக எடுக்க வேண்டுமென சிலரும் சொல்கிறார்கள். பொதுவாகவே காலத்தால் கணிக்க முடியாத மிக பழமைவாய்ந்த மரபுகள் இத்தகைய ஆராச்சி குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தவிப்பது ஒன்றும் புதியதல்ல. எனவே நமது பண்பாட்டு துவக்ககாலம் இதுவாகத்தான் இருக்க வேண்டுமென யாராலும் சொல்ல முடியவில்லை. அவ்வளவு பழமையான வரலாற்று பின்ணனி நமக்கு இருப்பதினால்தான் நம்மால் அவ்வளவு சீக்கிரம் எந்த பழக்க வழக்கங்களையும் கைவிட முடியவில்லை.

        காலம் மிகவும் கெட்டுவிட்டது. திருத்தவே முடியாது அளவிற்கு மனித மனங்கள் துருபிடித்து போய்விட்டன என்று நாம் நாள்தோறும் வருத்தப்படுகிறோம். அதற்கு காரணமில்லாமல் இல்லை. நம் குழந்தைகள் நம்மிடம் பேசும் நேரத்தை விட செல்போனில் பேசுகின்ற நேரம் மிக அதிகமாக இருக்கிறது. தாய்மொழியில் பேசுவதை கௌரவ குறைச்சலாக நமது இளைய தலைமுறையினர் கருதுகிறார்கள். சொந்த உறவுகளையே தங்களது சுயநலத்திற்காக தூக்கி எரிய துணிந்து விட்டார்கள். டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் மேல்நாட்டு கலாச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. ஆண், பெண் என்ற பாகுபாடே இல்லாமல் ஒழுக்கம் தவறி போய்விட்டார்கள். அன்பு, சகிப்பு தன்மை, அரவணைப்பு, பணிவு என்ற நற்பண்புகள் எதுவுமே கிடையாது என்பதை கண்ணெதிரேலேயே பார்க்கிறோம்.


ஆனால் ஒரு அடிப்படை விஷயத்தை மிக சுலபமாக மறந்து போகிறோம். இன்றைய இளைய தலைமுறையின் விடலைதனமான ஆட்டங்கள் எல்லால் முப்பது வயது வரையில்தான் அதன் பிறகு மனைவி, மக்கள், குடும்பம், பொறுப்பு என்று வந்தவுடன் முற்றிலும் மாறிபோய் விடுகிறார்கள் இன்னும் ஒருபடி சொல்வதென்றால் நம்மையும் விட அதிகமாக ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விடுகிறார்கள். அந்த தைரியத்தில் தான் தமிழ்பண்பாடு இன்னும் வாழ்கிறது என்கிறேன்.

 பொதுவாகவே நாகரிகம் மோகம் என்பது சில காலங்கள் தான். நாக்கு சுவைக்கு மனிதன் அடிமையாகும் போது பலவிதமான உணவு பதார்த்தங்களை தேடிப் போவதும் பிறகு வழக்கமான உணவிற்கு வந்து விடுவது எப்படி இயற்கையோ அப்படி தான் மேல்நாட்டு மோகமும் அதனால் நாம் உறுதியாக நம் தமிழ் பண்பாடு எக்காலத்திலும் அழிந்து போகாது என நம்பலாம்.

   ஆரியர், திராவிடர் என்ற இனப்பாகுபாடு வெள்ளைகார துரைமார்களால் உருவாக்கப்பட்டது தான் என்றாலும் இந்தியாவின் வடப்பகுதி மக்களுக்கும் தென்பகுதி மக்களுக்கும் பெரிய அளவிலான சிந்தனை வேறுபாடு, காலச்சார வேறுபாடு, இல்லையென்று யாரும் மறுத்துவிட முடியாது. மக்களின் அன்றாட வாழ்கையை மேலோட்டமாக பார்த்தாலே இந்த வித்தியாசத்தை உணரலாம்  


  பல விஷயங்களின் வட புலத்தவர் சிந்தைனைபோக்கு தென்பகுதியின் போக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். வடமொழி இலக்கியங்கள் மானிட தர்மத்தை பிறப்பை அடிப்படையாக கொண்டு அமைக்கிறது. அதனடிப்படையிலேயே தர்மசாஸ்திரங்கள் என்ற அரசியல் சமூக கோட்டுபாடு நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சாணக்கியரும் அவருக்கு முன்னால் இருந்த சமூக விஞ்ஞானிகளான பிரகஸ்பதி, மனு, உசானஸ் ,பரத்வாஜர், விசாலாட்சர், பாரசரார் காத்தியானர் போன்றோர்களும் தங்களது அரசியல் சிந்தனையை ஜாதியவாதத்தின் அடிப்படையில் இருந்து தான் ஆரம்பிக்கிறார்கள்.

 ஆனால் தென்பகுதி மக்கள் மனிதர்களை ஜாதியின் பெயரால் பிரித்து அழகு பார்க்கவில்லை. மாறாக அவர்கள் வாழும் நிலப்பகுதியின் தன்மையை அடிப்படையாக கொண்டு பிரித்தனர். மலையும் மலைசார்ந்த பகுதியை குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடத்தை முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த பரப்பை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும்  அரிதாக மழை காணும் பிரதேசத்தை பாலை என்றும் பிரித்து சொல்வது ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு கூட நன்றாக தெரியும்.


குறிஞ்சி நிலத்தில் வேடுவர், காட்டுவாசி, குறவர் போன்ற மக்களும், முல்லை நிலத்தில் ஆயர், இடையர் போன்ற மக்களும், நெய்தல் பகுதியில் மீனவர் பரதவர் போன்ற மக்களும், பாலை நிலத்தில் மறவர், மல்லர், கள்வர்கள் போன்ற மக்களும் மருத நிலத்தில் உழவர் வேளாளர் போன்ற மக்களும் வாழ்ந்ததாகத் தான் தெரிகிறதே தவிர வடபுலத்தார் சொல்லுவது போல் பிராமணர்கள், சத்ரியர்கள் வைசியகர்கள், சூத்திரர்கள் என்ற நால்வர்ணத்தில் மக்கள் அழைக்கப்பட்டதாக ஆதாரமில்லை.

  ரிக்வேதத்தில் உள்ள புருஷ சூத்தகம் என்ற பகுதியில் நான்கு வர்ண மக்களும் ஒரே தரத்தில் ஒரே தகுதியில் பேசப்படுகிறார்கள். ஆனால் மனுஸ்ருதி, அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்களில் வர்ணங்களில் ஏற்ற தாழ்வுகள் கற்பித்து அவைகள் சிறப்பித்தும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் மக்களின் அறிவு, கல்வி தகுதி போன்றவற்றில் ஏற்ற தாழ்வுகள் கற்பிக்கப்படுகிறதே தவிர குலம் சார்ந்த வேற்றுமைகள் காட்டப்படவே இல்லை. இதுதான் வடக்கு, தெற்கின் வித்தியாசமாகும்

  இக்கருத்தை மறுத்துரைக்கும் பலரும் இல்லாமல் இல்லை. தொல்காப்பியர் கூட அரசர், அந்தணர், வேளாளர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். எனவே பழம் தமிழர் வாழ்விலும் ஜாதிபாகுபாடு இருந்து இருக்கிறது என சொல்கிறார்கள். தொல்காப்பியர் அவ்வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என வாதிடுவது பொய்மையாகும்.   ஆனால் அந்த வார்த்தைகளை அவர் எந்த நோக்கில் பயன்படுத்தி இருக்கிறார் என ஆழமாக சிந்திக்க  வேண்டும்.


  சகல உயிர்களிடத்திலும் அன்பு காட்டி அறநெறியில் வாழ்வோரையும் தர்ம நெறிகளை மற்றவர்களுக்கு கற்பித்து வாழும் மக்களை அந்தனர் என தொல்காப்பியர் அழைக்கிறார். நாடாளும் அரசர்களை அரச வம்சத்தினர் என்கிறார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாணிகம் செய்து நாட்டின் பொருள் வளத்தை தாங்கி பிடிப்போரை, வைசீகர் என்கிறார். சேற்றிலே கால்வைத்து உலகமாந்தரை சோற்றிலே கைவைக்க செய்யும் உழவர் பெருங்குடியினரை வேளாண் மாந்தர் என அழைக்கிறார். ஆனால் அரசு தொழில் ஒன்றை தவிர மற்ற எதுவுவே பிறப்பால் அமைய வேண்டும் என்று தொல்காப்பியர் கருதவில்லை. வேளாண் ஒருவனின் மகன் கல்வி கற்று கற்ற வழி நின்று கற்றத்தை மற்றவருக்கு போதித்தான் என்றால் அவனை அந்தணன் என அழைப்பதற்கு தொல்காப்பியர் தடை விதிக்கவில்லை.

  வடமொழி வாழ்க்கை நெறி ஒவ்வொரு மனிதனும் பிரம்மசரியம், கிரகஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என நான்காக பிரிக்கிறது. ஆனால் பழந்தமிழர்கள் அகம், புறம் என்ற இரண்டாகத்தான் மனிதர் வாழ்வியலை பிரிக்கிறார்கள். கல்வி கற்று காதல் பெண்டிரை கரம் பற்றி கற்புடைய வாழ்க்கை வாழ்வதை அகம் என்றும் மற்ற அனைத்தையும் புறம் என்றும் அழைத்தார்கள். அதே போலவே தர்மம் என்ற அறத்தை இனத்துக்கு இனம் சம்பந்தப்படுத்தாமல் சூழ்ச்சி, வஞ்சகம், பொய்யுரைத்தல், புறஞ்சொல்லல் போன்றவை தவிர்த்த நன்னெறி மட்டுமே அறம் என்று சொன்னார்கள்.


   இந்தியாவின் வட திசையில் தோன்றிய பிறப்பின் அடிப்படையில் தொழில் என்ற சித்தாந்தம் மிக மெதுவாகவே தமிழகத்தில் புகுந்து இருக்கிறது. அதன் பிறகே ஜாதிகள் தோன்றி அவற்றில் ஏற்றத்தாழ்வுகள் கண்டிப்பாக நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம். திருக்குறள் அகநானூறு, புறநானூறு போன்ற தொன்மைகால தமிழ் இலக்கிய நூல்களில் ஜாதிய பாகுபாடு பேசப்படவே இல்லை.

 தமிழர்களின் பண்பாட்டு சிறப்பையும், வடக்கு தெற்குரிய சிந்தனை சமூகவியல் போன்றவற்றில் உள்ள வேற்றுமைகளையும் இங்கே எதற்காக இவ்வளவு நேரம் சொன்னேன் என்றால் சாணக்கியருக்கு இணையான அரசியல் சித்தாந்தத்தை வகுத்து தந்து இருக்கும் திருவள்ளுவரின் சிறப்பான எண்ணங்களை கொள்கைகளை இனி நாம் சிறிதளவு அறிய போகிறோம். அப்படி அறியும் போது சாணக்கியருக்கும் திருவள்ளுவருக்கும் உள்ள சுற்று சூழல் பின்ணனியை நன்றாக அறியவேண்டும் என்பதற்காகத்தான்.

   சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மிகவும் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அவர் அரசியலுக்காக மட்டுமே நூலை எழுதினார். ஆனால் வள்ளுவர் மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் என்னென்ன தேவையோ அவற்றை பற்றியெல்லாம் மிக ஆழமாக பேசுகிறார். அந்த தேவைகளில் ஒன்றாகவே அரசியலை பார்க்கிறார். அரசியலுக்கான நூல் என்ற தனிச்சிறப்பு அர்த்த சாஸ்திரத்திற்கு உள்ளது போல் மனித வாழ்கைக்கான வழிகாட்டி என்ற சிறப்பு குறளுக்கு உண்டு வள்ளுவர் அரசாங்கத்தை பற்றியும் பேசுகிறார். மனிதனின் காதல் வாழ்வை பற்றியும் பேசுகிறார். இவையெல்லாம் கடந்து புலனடக்கம் தவம் ஆத்ம ஐக்கியம் என்பதை பற்றியும் பேசுகிறார். இதனாலேயே சாணக்கியரை விட ஒருபடி மேலாக வள்ளுவர்  மதிக்கப்படுகிறார். இனி வள்ளுவரின் தனிப்பட்ட வாழ்வை சிறிது பார்ப்போம்.


  தமிழகத்தில் நால்வழி சாலை போடுவதற்கு முன்பு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக இருந்த ஒரு சிறிய முருகன் கோயில் மண்டபத்தில் பயண இடைவெளியில் மதிய உணவிற்காக சிறிது நேரம் தங்கினேன். அந்த மண்டபத்தில் ஒரு மின் விசிறி மாட்டப்பட்டு இருந்தது. அந்த விசிறியின் ஒவ்வொரு சிறகிலும் ஆண்டித்தேவர், சுப்பராயன் என்று தொடங்கி இருபதுக்கும் மேற்பட்ட பெயர்கள் மிக நெருக்கமாக எழுதப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மின்விசிறி வாங்க நன்கொடை வழங்கிய வள்ளல்களாம். காலனா பொருள் தர்மம் செய்தாலே நான் முந்தி, நீ முந்தி என ஊர்பெயர் என்று பதிவு செய்ய தள்ளு முள்ளு நடக்கும் நாட்டில் உலகமே வியந்து போற்றும் திருக்குறளை தந்தவர் தன்னைப்பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள ஒரு சிறு குறிப்பை கூட தரவில்லை. வள்ளுவரை பற்றி இன்று நாம் அறிந்தது எல்லாம் செவிவழி கதைகளும் ஆதாரமற்ற புனைவுகளுமே ஆகும்.

  வள்ளுவன் என்ற பெயர் கூட திருக்குறளின் குறட்பா எதுவிலும் காண முடியாது. அவர் காலத்திலோ அவருக்கு பின்னோ வந்த தமிழ் புலவர்கள் தான் குறளை எழுதியது வள்ளுவன் என்று நமக்கு அறிமுகம் செய்யகிறார்கள். ஒரு மகா பெரியவரை, மாமோதையை வள்ளுவன் என  ‘இன்‘ போட்டு அழைப்பது மரியாதையாகாது என்று வள்ளுவர் என ‘ர்‘ போட்டு அழைக்கலானோம் அவர் எழுதிய நூல் தெய்வத்தன்மை வாய்ந்தது என்பதினால் திரு என்ற பதத்தையும் சேர்த்து திருக்குறள் என்றும் அழைக்கலானோபமே தவிர அவர் எங்கு பிறந்தார். எப்போது பிறந்தவர் அவர் தாய் தந்தையர் யார், அவர் எத்தனைகாலம் இந்த மண்ணுலகில் வாழ்ந்தார் என்று எதுவுமே நமக்கு துல்லியமாக உறுதியாக தெரியாது.

சங்கம் அருவி காலத்தில் தோன்றிய பதிணென்கீழ்கணக்கு என்ற நூல் தொகுதியில் திருக்குறள் முதலாவது நூலாக வருவதினால் அது தொல்காப்பியத்திற்கு பிந்தியது என்றும் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற இரட்டை காப்பியங்களுக்கு முந்தியது என்றும் அதனால் திருக்குறளின் வயது 2500 வருடங்களுக்கு குறைவாகவும் 2000 வருடங்களுக்கு அதிகமாகவும் இருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.


    நாம் குறளில் உள்ள அரசியல் கோட்டுபாடுகளை மட்டும் பார்க்க போவதினால் அதைப் பற்றிய அடிப்படை விஷயத்தை புரிந்து கொள்வோம். பொருட்பா பகுதியில் அரசியல், உறுப்பியல் என்று இரண்டு இயல்களில் வள்ளுவர் அரசியல் பேசுகிறார். அரசு இயல் பகுதியில் அரசன், அரசப்பண்பு, ஆட்சிமுறை என்பதை கூறும் வள்ளுவர் உறுப்பியலில் அமைச்சர், நாடு, அரண், பொருள், படை, நட்பு, குடி என ஏழு வகை விஷயங்களை விவரிக்கிறார். அறத்துபாலிலும், காமத்துபாலிலும் கூட அரசியல் அவர் பேசினாலும் இப்பகுதிகளிலேயே அதிகப்படியான கருத்துக்கள் அவரால் தரப்படுகிறது அடுத்த அத்தியாயங்களில் அவற்றை சிந்திப்போம்.


 

Contact Form

Name

Email *

Message *