Store
  Store
  Store
  Store
  Store
  Store

ராமதாசின் சாயம் வெளுத்து விட்டதா...?


   டிக் காற்றில் அம்மி பறந்தது என்பார்கள் ஆடி வருவதற்கு முன்பே வீசிய தேர்தல் காற்றில் தமிழகத்தில் முக்கியமாக இரண்டு தலைவர்கள் பறந்து விட்டார்கள் அல்லது காணாமல் போய்விட்டார்கள் நான் யாரையும் சொல்லவில்லை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசையும், விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனையும் தான் சொல்கிறேன்.

 குத்துசண்டை மேடையில் போட்டி துவங்குவதற்கு முன்பு மேடையில் இங்கும் அங்கும் வீராவேஷமாக சுற்றுவார்கள் கைகளை மடக்கி, முறுக்கி காற்றை குத்துவார்கள். தோள்களையும், தொடைகளையும் தட்டி சிம்மக்குரல் எழுப்புவார்கள் போட்டி ஆரம்பித்து எதிராளி ஒரு குத்து விட்டவுடன் பூனைக்குட்டி போல பம்பிக் கொள்வார்கள். ராமதாசும், திருமாவளவனும் ஏறக்குறைய அப்படிதான் மக்கள் என்ற மாமல்லர்கள் விட்ட குத்தில் பேச்சி முச்சற்று பரிதாபமாக கிடக்கிறார்கள்.


 ஒரு விதத்தில் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகட்சிகள் எல்லாமே இப்படித்தான் கிடக்கிறது இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை இதை அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ பொதுமக்களாகிய நாம் நிச்சயம் எண்ணிப்பார்க்க வேண்டும் அலசி ஆராயவும் வேண்டும்.

                இந்திய முழுவதுமே ஜாதி பிரிவுகள் என்பதுதான் முக்கியமான சமூக அடையாளமாக கருதப்படுகிறது. எந்த ஒரு இந்தியனும் தன்னை இந்தியனாகவோ அல்லது வாழும் பிரதேசத்தின் பிரதிநிதியாகவோ அதாவது தன்னை மராட்டியன், தமிழன், மலையாளி என்று காட்டிக்கொள்வதற்கு பதிலாக குறிப்பிட்ட ஜாதிக்காரனாக காட்டிக் கொள்ளவே பிரியப்படுகிறான் தவிர்க்க முடியாத சுழலில் மட்டுமே தனது மாநிலம், மொழி, மதம் போன்றவற்றை வெளிக்காட்டுகிறான்.

 எவ்வளவு உயர்ந்த படிப்பாளியாக இருந்தாலும், பண்பாளனாக இருந்தாலும் இந்தியன் ஒவ்வொருவனின் மனதிலும் ஜாதி அபிமானம் என்பது அதிகமாகவே இருக்கிறது. நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த தலைவர்களை கூட ஜாதி பின்னணியில் தான் தற்போதய தலைவர்கள் பார்க்கிறார்கள். மக்களும் அதே சிந்தனையில் தான் இருக்கிறார்கள். ஒருவர் வீட்டில் அம்பேத்கார் போட்டோ மாட்டப்பட்டிருந்தால் அவர் நிச்சயம் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராகத்தான் பார்க்கப்படுகிறார்கள். அம்பேத்காரின் அறிவு, திறமை, தியாகம், செயல்பாடு எல்லாமே ஒரு ஜாதியின் எல்லைக்குள் தான் பார்க்கப்படுகிறதே தவிர பரந்த நோக்கில் யாரும் பார்ப்பதில்லை.


  மக்களின் மனதில் பலநூறு வருடங்களாக பதிந்து போய்விட்ட ஜாதிகளை பற்றிய நம்பிக்கை, ஜாதிகளின் மேலவுள்ள அபிமானம் அதிகமாக இருப்பதால்தான் பல ஜாதி தலைவர்கள் தோன்றி நாடு முழுவதும் வலம் வருகிறார்கள். தங்களது ஜாதிக்காராகள் அரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள், நாதியற்று கிடக்கிறார்கள் அதனால் நமது ஜாதியின் விடிவெள்ளியாக முளைத்திருக்கும் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்து ஜாதியின் பெருமையை நிலைநாட்டுங்கள் அப்போது தான் அடிமைப்பட்டு கிடக்கும் நமது ஜாதி அரசியல் ரீதியாக விடுதலை பெற்று சமுதாயத்தில் தலை நிமிரும் என்றும் பேசுகிறார்கள்.

            உதாரணத்திற்கு ராமதாஸ் அவர்களையே எடுத்துக்கொள்வோம். இவர் தனது கட்சியை வளர்க்க வன்னிய மக்களிடம் எத்தனை மாயாஜால வார்த்தைகளை அள்ளி வீசினார். தமிழகத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களாக வஞ்சிக்கப்பட்ட பிரஜைகளாக வன்னிய கவுண்டர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் அவர்கள் விடுதலையடைய வேண்டும்மென்றால் பாமக வளர்ந்தால் தான் முடியும் என்ற ரீதியில் பேசினார்.


  அமைதியான ஜனங்களுக்கு வெறிவுணர்ச்சியை ஊட்ட நியாயப்படி வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாவற்றையும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்ற வகையில் பேசி தம்மோடு இருந்த அப்பாவி அரிஜனமக்களையும், வன்னியர்களையும் நேருக்கு நேரான விரோதியாக மாற்ற முயர்ச்சித்தார்.

முரட்டுதனமான செயல் திட்டத்தால் அதாவது மரங்களை வெட்டி, சாலைகளை உடைத்து, அரசு சொத்துக்களை சேதாரம் செய்து வன்னியர்களின் போராட்ட குணத்தை தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி சட்டமன்றம் பாராளுமன்றத்தில் தனது உறுப்பினர் பலத்தை அதிகரித்துக் கொண்டார்.

 அமைச்சர் பதவியை அன்பு மகனுக்கு வாங்கி கொடுத்தது மட்டும் தான் ராமதாஸின் வன்னிய மக்களுக்கான ஒரே சேவையாகும். நமக்கு ஏராளமான உதவிகளை வாங்கி கொடுப்பார் ராமதாஸ் என கனவில் இருந்த படையாட்சி கவுண்டர்கள் வன்னிய குல காவலரின் செயலைக் கண்டு மலைத்துப் போய் நிற்கிறார்கள் அவர்களும் தான் எத்தனை காலம் இவரை நம்பி ஏமாந்து போவார்கள்?


  தனக்காக களை வெட்ட அனுப்பிய அண்ணன் வரப்பில் படுத்து தூங்குகிறான் என்றால் எத்தனை தம்பிகளால் அதை தாங்கி கொள்ள முடியும் தம்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அண்ணனின் பொய் வேஷம் கலைந்தும்விட்டது.

 ஜாதி உணர்வுகளை மட்டுமே வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்திய டாக்டர் ராமதாசை மக்கள் புறகணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் அறிகுறி தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாமக வெற்றிகரமாக தோல்வியை தழுவியது அப்போது மக்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற ஞானம் தைலாபுரக் கனவான்களுக்கு வரவில்லை

 தங்களது தோல்விக்கான நிஜகாரணங்களை பார்க்க துணிச்சல் ஈன்றி அன்புமணி-ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது புகையிலையை ஒழிக்க படாதபாடுபட்டார். அதனால் பீடி, சுருட்டு கம்பெனிகள் அவர் கட்சி தோற்க வேண்டுமென்று சதிவேலைகளை செய்தன அதுதான் தோல்விக்கான முழுகாரணம் என்று கட்சி தொண்டர்களிடம் பூசி மழுப்பினார்கள் அந்த மழுப்பல் வேலைகள் எல்லாம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.


  தாங்கள் போட்டியிட்ட 30 தொகுதிகளில் மூன்றே மூன்றில் மட்டும் பெற்றிருக்கும் வெற்றி இழுத்து பறித்த வெற்றி தான் வேட்பாளர்களின் சொந்த பலமும் கலைஞர் கொடுத்த காசு பலமும் தான் இந்த வெற்றியை தந்ததே தவிர ராமதாஸின் செயல்பாட்டுகாக கிடைத்தது அல்ல உண்மையில் வன்னிய மக்கள் அனைவருமே ராமதாஸின் முழுமையான சுயநல வடிவை கண்டு கலங்கிபோய் இருக்கிறார்கள். இனியும் அவர்கள் அவரை நம்புவார்கள் என்று சொல்ல முடியாது.

             பாமக ஓரம் கட்டப் பட்டது மட்டும் இந்த தேர்தலில் நடந்த நல்ல சங்கதி அல்ல தாழ்த்தப்பட்ட மக்களின் ஓரே காவலன் நாங்கள் தான் என மார்த்தட்டி மக்களின் முன் திரிந்த திருமாவளவனின் கூடாரமும் காலியாகி இருப்பது வரவேற்க தக்கதே ஆகும்

 ஒரு வேளை சோற்றுக்கும், ஒரு முழ துண்டிற்கும் வக்கத்துப்போய் எத்தனையோ மக்கள் சேரியில் துடித்துக் கொண்டுக்கிறார்கள் அவர்களின் வலியை வேதனையை மேடை தோறும் பேசி தீருமாவளவன் தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர அந்த வறிய மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட்டது இல்லை மேலும் அப்பாவி அரிஜன மக்கள் தங்களது பின்னால் அணிவகுத்து நிற்பதாக ஒரு மாயக் காட்சியை ஏற்படுத்தி அரசியல் கட்சிகள் இடத்தில் பெரிய கலக்கத்தை உண்டாக்கினார்.


  அரசியல்வாதிகளை மிரட்டுவதோடு மட்டும் விடுதலை சிறுத்தைகள் நின்றிருந்தால் மக்கள் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் திருமாவளவனின் தளபதிகளும், போர்ப்படை வீரர்களும் ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து செய்து தொப்பைகளை வளர்த்தார்கள். இவர்களின் அராஜகத்தால் மற்ற ஜாதி மக்கள் மட்டுமல்ல அரிஜன மக்கள் கூட பல துயரங்களை அனுபவித்தார்கள். அதனால் தான் திமுக-வை அடித்த அதே சவுக்கால் திருமாவளவனையும் அடித்து உட்கார வைத்து விட்டனர்.

     பாமக, விடுதலை சிறுத்தைகளை முன்னுதாரமாக கொண்டு ஜாதி கட்சி நடத்திய பல பெரிய தலைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து விட்டார்கள் தென் தமிழகத்தில் கணிசமாக வாழுகின்ற நாடார்களை குஷிபடுத்தி ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என திமுக போட்ட கணக்கு பொய்த்து போனது போலவே தேவர்கள், கொங்கு மக்கள் போன்றவர்களை வைத்துப் போட்ட கணக்கும் பிசுபிசுத்துப் போய்விட்டது.

         இங்கு நாம் சொல்கின்ற ஜாதி கட்சிகள் அனைத்துமே கலைஞரின் நிழலில் பவனிவந்தார்கள். அதை வைத்து தமிழ்நாட்டில் ஜாதி கட்சிகளுக்கான மவுசு குறைந்துவிட்டது என்று எப்படி சொல்ல முடியும் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட நாடார் கட்சி, தேவர் கட்சி, கொங்கு மக்கள் கட்சி எல்லாமே வெற்றி பெற்றிருக்கிறதே என்று சிலர் கேட்கலாம்.


  நான் ஜாதி கட்சிகளின் கவர்ச்சி குறைந்து விட்டதாக சொல்லவும் இல்லை நம்பவும் இல்லை ஜாதிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களின் உண்மையான இலட்சணத்தை மக்கள் ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். மேலும் ஜெயலலிதா தரப்பில் உள்ள ஜாதி கட்சிகளிள் எதுவுமே தங்களது சொந்த சின்னத்தில், சொந்த முகத்தில் மக்களை சந்திக்கவில்லை

 மாறாக அதிமுக-வின் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களில் எவரையும் தங்கள் ஜாதியின் பிரிதிநிதியாக மக்கள் பார்க்கவில்லை. திமுக-விற்கு எதிரான அதிமுக வேட்பாளராகவே இவர்கள் பார்க்கப்பட்டு வெற்றி பெற செய்தார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

 இதை சம்பந்தப்பட்ட அவர்களும் ஒத்துக்கொள்வார்கள். ஆக தற்காலிகமாகவாது ஜாதி தலைவர்களின் கூப்பாடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது நிரந்தரமாக வேண்டும் என்பது தான் பலரின் விருப்பம்.

Contact Form

Name

Email *

Message *